RBI Monetary Policy Committee Meeting December 2022: 


வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் உயர்த்துவதாக ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இம்முறை 35 பேசிக் பாயிண்ட்ஸ் (basis points (bps)) 






இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ( Shaktikanta Das) அறிவித்துள்ளார்.


முன்னாதாக, ரிசர்வ் வங்கி கடந்த மே, ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி இருந்தது. இந்த நிதி ஆண்டில் ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 


ரெப்போ வட்டி விகிதம்:


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் தான் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால், ரிசர்வ் வங்கியிடம் நாட்டில் உள்ள வங்கிகள் அதிக விகிதத்தில் கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது கடன் வாங்குபவர்களின் இஎம்ஐ-களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருபவர்களுக்கும் பொருந்தும். அப்படியானால் இனி வரும் இஎம்ஐ தொகை அதிகரிக்கும்.


கொரோனா காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை சரி செய்வதறகாக இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த வட்டி விகிதம், இந்த நிதியாண்டில் நான்கு முறை உயர்த்தப்ப்பட்டது. கடந்த 2020 -ஆம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போதைய புதிய கொள்கையின் படி, 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த 12 மாதங்களுக்கு நாட்டின் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்று சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி துறை, கிராமபுற வளங்கள் மற்றும் சர்வீஸ் செக்டார்கள் பெருமளவு பங்களிப்பதாகவும், வேளாண் துறை சீரான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


2023 ஆம் நிதியாண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜி.டி.பி. (Gross domestic product) 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ரிசர்வ் வங்கியின் முந்தைய கணிப்பான 7 சதவீதத்தை விட குறைவானது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். 


கடந்த மே மாதம் 40 பேசிக் பாயிண்ட் மற்றும் ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் 50 பேசிக் பாயிண்ட்கள் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.