தனக்கென ஒரு தனி ஸ்டைல் படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் வைபவ். சென்னை 28, மங்காத்தா, ஆம்பள, அரண்மனை 2, லாக் அப், மேயாத மான், மலேசியா டூ அம்னீசியா, ஆலம்பனா, பஃபூன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.


ரணம்:


அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை கலந்த படங்களாகவே இருந்து வந்தன. ஆனால் தற்போது நடிகர் வைபவ் நடித்துள்ள 25வது திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் வைபவ் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் 'ரணம்'.


 



 


படக்குழு:


மித்ரா மிதுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் நாகராஜன் தயாரிப்பில், ஷெரிஃப் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள 'ரணம்' திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, சரஸ் மேனன், பதமன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அருள் கரோலி இப்படத்திற்கு இசையமைக்க பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு பணிகளையும், முனீஸ் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தின் மூன்றாவது பாடலான 'பொல்லாத குருவி' பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டார். 


 



சிம்பு வெளியிட்ட ட்ரெயிலர் :


கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'ரணம்' திரைப்படம் பிப்ரவரி 23ம் தேதி வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் படத்தின் ட்ரெயிலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதை நடிகர் சிம்பு தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். "அன்பு சகோதரன் வைபவ் நடித்திருக்கும் 25 வது படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல மைல் கற்களை விரைவில் அடைய வேண்டும். கடவுளின் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும்" என குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் நடிகர் சிம்பு.   


 



ரணம் படத்தில் நடிகர் வைபவ் சடலங்களின் முகத்தை வரையும் கலைஞராகவும், கிரைம் கதை எழுத்தாளராகவும் நடித்துள்ளார். இதுவரையில் வைபவ் நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் அவரின் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.