சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ’வைகைப் புயல்’ வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
'இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அதகளமாக வடிவேலு அறிகுகமாகும் நிலையில், வடிவேலு ரசிகர்களுக்கு கலர்ஃபுல் காமெடி விருந்தாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் ஸ்டார் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார்.
மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலாக ’எங்க அப்பத்தா’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகளை துரை, அசல் கோலர் இணைந்து எழுதியுள்ளனர். நடிகரும், பிரபல கொரியாக்ராஃபருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.
இப்படத்தை முன்னதாக நவம்பர் 11ஆம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போன நிலையில் தற்போது படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் சுராஜ், “மருதமலை படத்தில் வடிவேலு ஏற்று நடித்த என்கவுண்டர் ஏகாம்பரம் கதாபாத்திரத்திரம் 2 மணி நேரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் இந்தப்படம் இருக்கும்.
படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை காமெடிதான். சென்டிமெண்ட்டுக்கு இங்கு இடமே கிடையாது. அந்த கதாபாத்திரத்தை மனதில் வைத்துதான், அவரின் நாய்கள் திருடும் கதாபாத்திரத்தை உருவாக்கினோம்.அவருக்கு இந்தக் கதாபாத்திரம் நிச்சயம் வித்தியாசமானதாக அமையும்.
இதற்காக ஏராளனமான நாய்களை பார்த்தோம். வெளிநாடுகளில் இருந்து கூட நாய்களை, இறக்குமதி செய்தோம். அவைகளுக்காக தனி ஏசி கேரவனையும் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.
கொரோனா ஊரடங்கில் நாங்கள் நிறைய பேசினோம். அப்போது அவர் என்னிடம் தன்னுடைய ரி என்ட்ரி வேற லெவலில் இருக்க வேண்டும் என்றார். இந்தப்படத்தில் அவருக்கு 7 முதல் 8 தோற்றங்கள் இருக்கின்றன. வடிவேலு இந்தப்படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். ஒரு சீன் செய்வதற்கு முன்னால், கேரவனுக்குள்ளே அந்த சீன் ஒர்க் அவுட் ஆகுதான்னு பலரிடம் கேட்டுபார்ப்பார்.
மக்கள் காமெடிகளை பார்த்து பழைய காமெடிகள் மாதிரி இல்லையேன்னு சொல்லிடக்கூடாதுன்னு என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். அவரது சிம்மாசனம் இன்னும் காலியாக உள்ளது, அவர் மட்டுமே அதில் அமர முடியும். எனவே, அவர் இன்னும் அதற்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த விரும்பினார்.
அப்பத்தா பாட்டுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க சொல்லி கேட்டோம். அவர் கண்டிப்பா பண்றேன், அண்ணன் படத்துக்கு பண்ணாம வேற யாரு படத்துக்கு பண்ணபோறேன் சொல்லி பண்ணார்.” எனத் தெரிவித்துள்ளார்.