தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு. தமிழ்நாட்டில் இவரது நகைச்சுவைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த வடிவேலு, 2006-ஆம் ஆண்டு முதன்முறையாக கதாநாயகனாக இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடித்தார்.


இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரம்மாண்டவ வெற்றி படங்களை இயக்கிய ஷங்கர் தயாரித்திருந்தார். மேலும், ஏற்கனவே உச்சத்தில் இருந்த வடிவேலுவின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து கதாநாயகனாக இந்திரலோகத்தில் நா. அழகப்பன், எலி என்று ஏராளமான படங்களில் நடித்தார்.




கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியுள்ள வடிவேலுவின் நடிப்பில் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கரே தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாகி வந்தது.


ஆனால், வடிவேலுவிற்கும் தயாரிப்பாளர் தரப்பிற்கும் இடையே போட்டி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், நடிகர் வடிவேலு படத்தில் நடிக்க ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சாட்டியது.


இதையடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக இயக்குனர் ஷங்கர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். ஷங்கர் தரப்பில் இருந்தும், வடிவேலு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுதொடர்பாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள “எஸ்” பிக்சர்ஸ் ஷங்கர், “23-ஆம் புலிகேசி 2” திரைப்படத்தில் நடித்த நடிகர் வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.


மேற்படி புகார் சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ், நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.