'டிக்கிலோனா' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கார்த்திக் யோகி. அதைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், ரவி மரியா, எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ஜாக்குலின், சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க தீபக் ஒளிப்பதிவு பணிகளையும், சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் “சாமி இல்லனு சொல்லிட்டு சுத்திகிட்டு இருந்த ராமசாமி தானே நீ?” என இடம்பெற்று இருந்த வசனம் ஒன்று, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு சந்தானம் “நா அந்த ராமசாமி இல்ல” என சொல்லும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். பிறகு அந்த வீடியோவை நீக்கிவிட்டார். தந்தை பெரியாரை விமர்சிப்பது போல இந்த வசனம் சந்தானம் படத்தில் இடம்பெற்று இருப்பதாக இணையத்தில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "டிக்கிலோனா படத்துக்குப் பிறகு நான் இயக்கிய படம் இது. 1974ம் காலகட்டத்தை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மெட்ராஸ் ஐ பரவிய போது மக்கள் அதை எப்படி கண்டு அச்சப்பட்டனர் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறேன்.
இப்படத்தின் ஹீரோ சந்தானம் பானை செய்பவராகவும், ஹீரோயின் மேகா ஆகாஷ் ஒரு மருத்துவராகவும் நடித்துள்ளனர். படப்பிடிப்பை தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் 63 நாட்களில் எடுத்து முடித்தோம். இது முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் படம் தான். இதில் எந்த இடத்திலேயும் அரசியல் பார்வை இருக்காது. நடிகர் சந்தானத்தின் ட்வீட் வேறு விதமாக அர்த்தம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மற்றபடி படத்தில் யாரையும் புண்படுத்தும் வகையில் காட்சிகள் இல்லை. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியையும் இப்படத்தில் வைக்கவில்லை. கதையோடு ஒன்றியே அந்த வசனம் அமைக்கப்பட்டு இருந்தது. படத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அது படம் பார்க்கும்போது மக்களுக்கு அது புரியும். அந்த வசனம் குறித்தும் அதனால் ஏற்படும் சர்ச்சைக்கும் விரைவில் நடிகர் சந்தானம் விளக்கம் கொடுப்பார்" எனக் கூறியுள்ளார்.
'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் கூட படம் நன்றாக இருக்கிறது முதலாளி என சந்தானத்தை பாராட்டியதாகவும் இயக்குநர் கார்த்தி யோகி குறிப்பிட்டுள்ளார்.
சந்தானம் நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் வசனம் ஏற்கெனவே பேசுபொருளாக மாறி சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார் எனும் தகவல் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.