Vaazhai 2 : நான் உங்கள் எல்லாரையும் வென்றெடுப்பேன்..வாழை 2 நிச்சயமாக வரும் ..வாழை வெற்றி விழாவில் மாரி செல்வராஜ்

Vaazhai 2 : வாழை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக வாழை படத்தின் வெற்றிவிழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

வாழை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான படம் படம். குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. 

Continues below advertisement

வாழை வெற்றி விழா

மாரி செல்வராஜ் இயக்கிய அடுத்தடுத்த நான்கு படங்கள் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளன. குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் உலகளவில் ரூ 35 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. தி கோட் போன்ற பெரிய படங்கள் வெளியானபோதும் வாழை படத்திற்கு திரையரங்கில் கூட்டம் இருந்தது. வாழை திரையரங்கில் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படத்தின் வெற்றி விழா  நேற்று கொண்டாடப்பட்டது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக பேசினார். 

"வாழை படத்தை எப்படி ப்ரோமோட் செய்யப்போகிறோம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த படத்தைப் போட்டு காட்டி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். இந்த படத்தைப் பார்க்க நான் யாரையெல்லாம் அழைத்தேனோ அவர்கள் எல்லாரும் வந்திருந்தார்கள். படத்தைப் பார்த்த அனைவரும் இந்த படத்தை மக்கள் பார்த்துவிட வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

மாரி செல்வராஜின் படங்கள் தங்கு தடையில்லாமல் மக்களிடம் சென்று சேர்வதற்கு முக்கியமான காரணம் எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள்தான். வாழைத் திரைப்படத்தை தமிழ் சமூகம் பேசி இருக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றி தமிழ் சமூகம் மாரி செல்வராஜை எந்த அளவிற்கு நம்புகிறது என்பதை எனக்கு உணர்த்தியிருக்கிறது. 

ஒரு பெரும் மக்கள் கூட்டம் இந்த படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் இருந்திருக்கலாம் அவர்களையும் வெல்ல தான் நான் முயற்சி செய்வேன். என்னுடைய படங்கள் மூலமாக அனைவரையும் வென்றெடுப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வாழை படத்திற்கு பின்பும் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நான் வாழை இரண்டாம் பாகத்தை எடுப்பேன். நிச்சயமாக வாழை 2 ஆம் பாகம் வரும் . சிவனைந்தான் கதாபாத்திரத்தை வைத்துதான் அந்த படத்தை எடுப்பேன். அதற்கு பின் ஒரு கதை இருக்கிறது. அது என்னை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் " என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola