சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான 'தங்கலான்', டிமான்டி காலனி 2 , ரகு தாத்தா உள்ளிட்ட திரைப்படங்களில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் தங்கலான் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. அதே போல ஹாரர் ஜானரில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி 2' படமும் ஆடியன்ஸை கவர தவறவில்லை. ஆனால் இப்படங்களுடன் களம் இறங்கிய கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' திரைப்படம் கவனத்தை ஈர்க்க முடியாமல் பரிதாபமாக டெபாசிட் இழந்தது. இந்த ரேஸில் 'தங்கலான்' திரைப்படம் இதுவரையில் 78 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. 'டிமான்டி காலனி 2 ' படமும் ஓரளவுக்கு சமாளித்து கிட்டத்தட்ட 39 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான 'வாழை', 'கொட்டுக்காளி' படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. அதில் 'கொட்டுக்காளி' படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்தது என்பதால் பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்தது. அதே வேளையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சிறு வயதில் எதிர்கொண்ட சாதி பாகுபாடுகளை மையமாக வைத்து 'வாழை' படம் உருவாகி இருந்தது என்பது ஒரு புறம் இருக்க பிரபலங்கள் அனைவரும் சிறப்பு திரையிடலை பார்த்து கொண்டாடிய படம் என்பதால் 'வாழை' படம் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
'வாழை' படம் வெளியான முதல் நாளே வசூலில் பின்னி எடுத்தது. முதல் நாளில் மட்டும் 1.15 கோடிகளை வசூலித்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த நாட்களில் 2.50 கோடி, 4 கோடி என்ன பட்டையை கிளப்பி நான்கே நாட்களில் 8 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. மாரி செல்வராஜ் ஒரு பக்கம் பாராட்டு மழையில் நனைந்து வரும் இந்த சூழலில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் படம் வெளியாவதற்கு முன்னரே சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த 'கொட்டுக்காளி' படம் வசூல் ரீதியாக திணறி வருகிறது. முதல் நாள் 50 லட்சம் வசூலிக்க அடுத்தடுத்த நாட்களில் அதுவும் குறைந்து கொண்டே வருகிறது. கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் 'கொட்டுக்காளி' படத்தின் பிரீமியர் ஷோ பார்த்து பாராட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.