தமிழ் திரையுலகமே கொண்டாடும் ஒரு படமாக உள்ளது 'வாழை'. இப்படத்தில் சிவனைந்தனின் தாயாக நடித்த ஜானகி அம்மா ஏற்கனவே மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மீண்டும் வாழை படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கே அமைந்தது. 'வாழை' படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜானகி அம்மா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். 



படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என அனைத்தையும் கிளி பிள்ளைக்கு சொல்லி கொடுப்பது போல சொல்லி கொடுத்தார். எப்படி முட்டி போட வேண்டும், எப்படி நடக்க வேண்டும், வாழை தாரை எப்படி சுமக்க வேண்டும் என அனைத்தையும் அவர் தான் சொல்லி கொடுத்தார். ஒரு முறை அப்படி தான் சரிவில் வாழை தாரை சுமந்து கொண்டு இறங்க வேண்டும். அப்படி இறங்கும் போது சறுக்கி விட வாழை தாரை கீழே போட்டுவிட்டு வாழைமரத்தை பிடித்துவிட்டேன். இயக்குநர் உட்பட அனைவரும் ஓடி வந்துவிட்டார்கள். அப்போது கூட இயக்குநர் என்னிடம் சொன்னது இது தான். பார்த்து பத்திரமா பண்ணுங்க அம்மா. தார் கீழே விழுந்தாலும் பரவாயில்லை. கை கால் பத்திரம். இதை தான் சொல்லிட்டே இருப்பார். 


 




சேற்றில் இறங்கி நடந்தது எல்லாம் என்னுடைய உடம்புக்கு சேரவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது. ஊசி போட்டு கொண்டு போய் நடித்தேன். வசனம் பேசுறது கண் அசைவு எல்லாத்தையும் அவர் சொல்லி கொடுக்க கொடுக்க நாங்கள் நாங்களாகவே இல்லை. அந்த கேரக்டருக்கு உள்ளேயே போயிட்டோம். அழும் காட்சியில் எல்லாம் மனம் உடைஞ்சு போய் விட்டேன். டைரக்டர் சார் கட் சொல்லவே மறந்து போயிட்டார். அந்த அளவுக்கு எமோஷனலா இருந்துச்சு. அவரும் அழுதுகிட்டே தலைகுனிந்து உட்கார்ந்து இருந்தார். 


படம் பார்த்து விட்டு வெளியில் வந்த அனைவரும் யார் என்னனு எனக்கு தெரியாது. எல்லாரும் கட்டிப்பிடிச்சு அழுதுட்டாங்க. அது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. இது எல்லாமே இயக்குநர் சாரை தான் போய் சேரும். 


இயக்குநர் சார் இதுவரையில் என்னை அம்மா என்று தான் கூப்பிடுவார். நான் பார்க்க அவங்க அம்மா மாதிரியே இருக்கிறேன் என சொல்வார். நான் அவரை என்னுடைய மகனாக தான் பார்க்கிறேன். அவருடைய படத்தில் நடிக்க மட்டும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நான் மிகவும் ஏங்கி போய் இருப்பேன் என பேசி இருந்தார் 'வாழை' புகழ் ஜானகி அம்மா.