தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாத்தி படத்தில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
குடும்ப ஆடியன்ஸ்
தனுஷ் முதன்முறையாக பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தெலுங்கில் சார் எனும் பெயரில் வெளியாக உள்ளது. ஜி.வி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
சென்ற ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய இரண்டு படங்களுமே பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரையிலான குடும்ப ரசிகர்களுக்கான படங்களாக அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தன.
இந்த ஆண்டின் முதல் தனுஷ் படம்
இந்நிலையில் இந்த ஆண்டு தனுஷின் முதல் படமாக வெளியாகும் வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாலை 6.30 க்கு வெளியான இந்த ட்ரெயலர் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவர்ந்து படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, அதனைச் சுற்றி நடைபெறும் அரசியல் ஆகியவற்றை கேள்வி கேட்கும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. மேலும், தனியார் பள்ளிகள் அமைப்பைச் சேர்ந்தவராகவும் அரசு பள்ளிக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியராகவும் வருகிறார் தனுஷ். சமுத்திரக்கனி தனியார் பள்ளிகள் அசோஷியேஷன் தலைவராக வருகிறார்.
‘கல்வில கிடைக்கற காசு அரசியல்ல கிடைக்காது’ “பணம் எப்படி வேணா சம்பாதிக்கலாம்; ஆனா படிப்பு தான் மரியாதைய சம்பாதிச்சு தரும்” எனும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கவனமீர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான வா வாத்தி பாடல் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாடலான நாடோடி மன்னன் பாடல் வெளியானது.
இசை வெளியீட்டு விழா
அதனைத் தொடர்ந்து பிப்.05ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், ஒன் லைஃப், கலங்குதே, சூர்ய பறவைகளே ஆகிய மீதம் இருக்கும் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, ஒரு கதையை தனுஷ் சாரிடம் சொல்கிறேன். அவ்வளவு தான்... அதற்கு மேல் வேறு எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. அவரிடம் கதை சொன்னதையே பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.
நான் முழு கதையையும் சொன்ன பின் தனுஷ் ஒன்றும் கூறாமல் கைகளை மட்டும் தட்டினார். அதன் பின் க்யூட்டான தெலுங்கில் டேட்ஸ் எப்போ கொடுக்கட்டும் என்று கேட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது" எனப் பேசினார்.