நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் தாண்டி சில படங்கள் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை காலத்தும் கொண்டு க்ளாசிக் அந்தஸ்து பெறும். அப்படி ஒரு திரைப்படம் தான் ‘வாரணம் ஆயிரம்’ (Vaaranam Aayiram)
16ஆம் ஆண்டில் வாரணம் ஆயிரம்
சூர்யா நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. ஸ்டைலிஷான மேக்கிங், காதல், எமோஷன், ட்ராவல் என சூர்யாவுக்கு பக்கா பேக்கேஜாக அமைந்த இப்படம், தந்தை - மகனுக்கு இசையேயான உறவை மையப்படுத்தி அமைந்து லைக்ஸ் அள்ளியது.
தந்தை - மகன் என இரு வேடங்களை சூர்யா ஏற்றிருந்த நிலையில், சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் பாடல்களும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்து படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளிவந்து சுமார் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் சென்ற ஆண்டு தொடங்கி ஒவ்வொரு மொழியாக ரீ - ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
தெலுங்கில் சாதனை
தெலுங்கு சினிமாவில் சூர்யாவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், “சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்” எனும் பெயரில் அப்போதே வெளியாகி படம் அங்கும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு மீண்டும் தெலுங்கில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட வாரணம் ஆயிரம் திரைப்படத்தினை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
500 காட்சிகளுக்கு மேல் தெலுங்கு ரீ- ரிலீஸில் திரையிடப்பட்டு சாதனை படைத்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம், தன் டோலிவுட் ரசிகர் பட்டாளத்தின் பவரை சூர்யா நிரூபித்தார்.
கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்
தொடர்ந்து சென்ற ஆண்டு படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு தமிழிலும் வாரணம் ஆயிரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதலில் சென்னையில் மட்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், பின் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு காரணமாக பிற ஊர்களிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. திரையரங்குகளில் இன்று வெளியான படத்துக்கு அளிக்கும் வரவேற்பைப் போல் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடித் தீர்த்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
கர்நாடகாவிலும் சாதனை
அந்த வரிசையில் தற்போது வாரணம் ஆயிரம் திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ரீ- ரிலீஸில் ப்ளாக்பஸ்டர் சாதனையை வாரணம் ஆயிரம் படைத்துள்ளதாக அம்மாநில திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது கர்நாடகாவில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு மூன்று வாரங்களாக வெற்றிகரமாக ஓடி வரும் வாரணம் ஆயிரம் திரைப்படம், இதுவரை ரூ.75 லட்சங்கள் வசூலை எட்டியுள்ளதாகவும், ரீ- ரிலீஸில் முதல் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் வாரணம் ஆயிரம் தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல் சூர்யா ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.