`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானுக்குப் பிறந்த நாள் கொண்டாடிய கையோடு, மறுநாளே மற்றொரு இசை ஜாம்பவானின் நினைவு நாளைக் கடைப்பிடிக்க தமிழ்ச் சமூகம் தயாராக வேண்டும். எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மஹாதேவன் ஆகிய இரு பெரும் இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிய அதே காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த `மெல்லிசை சக்ரவர்த்தி’ வி.குமாரின் நினைவு நாள் இன்று. 


வி.குமார் தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் கொண்டாடப்படாதவர். அவரது பாடல்களை நாம் அவ்வபோது வானொலியில் கேட்டாலும், அவை எம்.எஸ்.வியின் பாடல்களாக இருக்கும் என நினைத்திருப்போம். எனினும், அவரது இசையின் மெல்லிசை வடிவம் அவர் காலத்திலேயே அவருக்குப் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்திருந்தது. 


குமரேசன் அவரது இயற்பெயர். சினிமாவிலும் நாடகங்களும் இசையில் பணியாற்றிய போது, `வி.குமார்’ என்று அவர் அழைக்கப்பட்டார். 1934ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த வி.குமார், தொலைபேசி அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர். இசையின் மீதான ஆர்வம் காரணமாக தனியாக இசைக்குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்து வந்தார். தன் நண்பர் மணிவேந்தனின் `கண் திறக்குமா’ என்ற நாடகத்திற்கு முதன்முதலாக இசையமைத்து நாடகத்துறைக்குள் நுழைந்தார் வி.குமார்.



தொடர்ந்து நாடகங்களுக்கு இசையமைத்து வந்த வி.குமாருக்குப் பிரபல இயக்குநர் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்த பிறகு, அவரது நாடகமான `வினோத ஒப்பந்தம்’ வி.குமாரின் பின்னணி இசையுடன் வெளிவந்தது. கே.பாலசந்தர் இயக்கத்தில், நடிகர் நாகேஷ் நடித்த `நீர்க்குமிழி’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவுற்குள் நுழைந்தார் வி.குமார். அந்தப் படத்தில் வி.குமாருக்குத் துணையாகவும், படத்தின் இணை இசையமைப்பாளராகவும் இருந்தவர் ஏ.கே.சேகர். இவர் தற்போது இந்திய சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆவார். 


தமிழ் சினிமாவில் சுமார் 150 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் வி.குமார். நடிகர் சிவாஜி கணேசனின் `நிறைகுடம்’ திரைப்படத்திற்கும் இவரே இசையமைப்பாளர். இந்தத் திரைப்படம் மட்டுமே வி.குமாரும், சிவாஜி கணேசனும் இணைந்த ஒரே திரைப்படம் ஆகும். பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி முதலானோருடன் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் வி.குமார்.


இவர் இசையமைத்த பிரபல பாடலான `காதோடு தான் நான் பாடுவேன்’ பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது. சத்தமாக, ரகளையான பாடல்களைப் பாடி பிரபலமான எல்.ஆர்.ஈஸ்வரியை மெல்லிசைப் பாடலைப் பாட வைத்த வி.குமார், மென்மையான குரலின் அனைவரையும் கவர்ந்த பி.சுசிலாவை `நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்’ என்ற பாடலைப் பாட வைத்தார். மறைந்த மூத்த நடிகை மனோரமா பாடிய `வா வாத்தியாரே வூட்டாண்டே’ பாடலும் வி.குமார் இசையமைத்து இன்றும் மிகவும் விரும்பி கேட்கப்படும் பாடல். 



1977ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் வி.குமாருக்குத் தமிழக அரசால் `கலைமாமணி விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் இவருக்கு `மெல்லிசை மாமணி’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.


விருதுகளையும், பட்டங்களையும் கடந்து, தற்போதைய தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் கொண்டாடப்படாத இசையமைப்பாளர் வி.குமார். அவரது நினைவு நாளான இன்றும், அவரது பாடல்கள் தமிழ்நாட்டில் எங்கேனும் ஒரு மூலையில் யாரையோ மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. அதுவே அவருக்குத் தமிழ்ச் சமூகம் செய்யும் அஞ்சலி.