அண்ணன் சூர்யா அகரம் ஃபவுண்டேஷன் மூலம் மாணவர்களை உருவாக்கினால், தம்பி கார்த்தி உழவன் ஃபவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டி ஊக்குவித்து கவுரவித்து வருகிறார்.
இன்று அகரமும், உழவனும் சேர்ந்து மேடையேற பார்வையாளர்களுக்கு ஏக கொண்டாட்டம்.
உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகள் என்ற பெயரில் ஆண்டுதோறும் விவசாயத் துறையில் தங்களது தனித்துவதத்தைக் காட்டி வரும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறார் கார்த்தி. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற, கிராமத்து வாசனை வீச கார்த்தியும் சூர்யாவும் வேட்டிச் சட்டையில் அரங்கிற்கு வந்தனர்.
கடந்த ஆண்டு உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் நடந்த விழாவில், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பங்கள், சிறு குறு விவசாயத்திற்கு உதவும் கருவிகளை கண்டுபிடித்த இளைஞர்கள், பார்வை சவால் கொண்ட விவசாயிகள், நலிவடைந்த விவசாயிகள் என பலருக்கும் உதவி தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மேடையில் புதிய அறிவிப்பு ஒன்றை கார்த்தி வெளியிட்டார். விவசாயம் செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசுப் போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்தார். சிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன விவசாயக் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறினார். அவரது அறிவிப்பை அரங்கம் கரகோஷத்தால் அதிரச் செய்து வரவேற்றது.
முதலில் பேசிய கார்த்தி, அண்ணனின் அகரம் ஃபவுண்டேஷன் எப்படி கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களை வளர்த்தெடுக்கிறது என்பதைப் பார்த்து ஈர்க்கப்பட்டேன். அப்போது விவசாயம் தான் நினைவுக்கு வந்தது. விவசாயம் சார்ந்த என்ஜிஓக்கள் என்ன செய்யத் தவறுகிறது என்பதை அறிந்தோம். அதற்காக நிறைய ரிசேர்ச் செய்தோம். அப்போது தான் விவசாயம் எவ்வளவு வித்தியாசமானது, எவ்வளவு உன்னதமானது என்பதை அறிந்து கொண்டேன். ஒரு மண்ணில் விளைவது இன்னொரு மண்ணில் விளைவதில்லை. இந்த காலம் ஃபாஸ்ட் காலம். எல்லாத்துக்கும் உடனடியாக தீர்வு தேடும் காலம். ஆனால் ஒரு விவசாயி விதை விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து பின்னர் அறுவடை செய்கிறார். எத்தனை பொறுமையான வேலை. அந்த உன்னதமான விவசாயிகளை கவுரவிக்கவே இந்த மேடை உள்ளது என்றார்.
மேடையில் சூர்யா பேசும்போது, எனது உறவினர்கள் பலரும் இன்றும் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது என் விருப்பமல்ல. அனைத்து விவசாயிகளின் குரலாக இருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரு மரம் வளரவில்லை அதை வெட்டிவிடச் சொன்னார்கள் ஆனால் நானும் கார்த்தியும் அந்த மரத்திடம் பேசியதால் மரம் நன்றாக வளர்ந்தது. முதலில் யூடியூபில் பார்க்கும்போது இது சாத்தியமா என நினைத்தோம். போகப்போக மரம் வளர்வதைப் பார்த்து அது உண்மை என அறிந்து கொண்டோம் என்றார்.