உழவன்  பவுண்டேஷன் விழாவில் நடிகர் சிவகுமார் தனது அம்மா குறித்து  பேசியது அங்கு வருகை தந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ள சூர்யா, கார்த்தி இருவரும் சமூக பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா அகரம் பவுண்டேஷன் என்னும் கல்வி அறக்கட்டளையை நடத்தி வரும் நிலையில், விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். 


இதனிடையே உழவன்  பவுண்டேஷன் சார்பில் விவசாயிகளுக்கு ‘உழவன் விருதுகள்’ வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கார்த்தியின் அப்பாவும் நடிகருமான சிவகுமார், நடிகர்கள் ராஜ்கிரண், பொண்வன்னன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது. 






நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “இங்க வருகை தந்துள்ள அத்தனை பேரும் நம்மாழ்வார் ஐயா பெயரை தான் சொல்றாங்க. இதுதான் அடுத்த புரட்சி என நான் நினைக்கிறேன். அவரை நான் பார்த்திருக்கிறேன். அவரின் புத்தகங்கள், வீடியோக்கள் பார்த்துள்ளேன். இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டியது நம் கடமையாகும். நான் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். சிறுதானியங்களுக்கான செயல்முறை யூனிட்டுகளை  ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் அதிகாலையில் விவசாயிகளுக்கு பொருட்களை சந்தைக்கு கொண்டு வர பொது போக்குவரத்து வசதியையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார். 


இதனையடுத்து பேசிய நடிகர் சிவகுமார், “நான் 10 மாத குழந்தையாக இருக்கும்போது எங்க அப்பா இறந்துட்டாரு. அப்பா எப்படி இருப்பாங்கன்னே தெரியாது. ஒருவேளை அப்பா உயிரோடு இருந்து, அம்மா இறந்துருந்தா இப்ப நான் அனாதையாக இருந்துருப்பேன். இந்த மேடையில நின்றிருக்க மாட்டேன். சூர்யா, கார்த்தி பிறந்திருக்க மாட்டாங்க. பெண்கள் தான் கடவுள். 5 ஆயிரம் ஆண்கள் சேர்ந்தால் கூட ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாது.


ஆனால் ஒரு பெண்ணால் முடியும். அதனால் படைப்பு கடவுள் பெண்கள் தான். கைம்பெண் தாயால் வளர்க்கப்பட்ட நான். நான் பிறந்தப்ப எங்க ஊர்ல மின்சாரம், தண்ணீர் வசதி என எதுவும் கிடையாது. என்னதான் பெரிய வீரனாக இருந்தாலும் தாய் தான் கடவுள். எனக்கு கல்யாணம் பண்ணும் ஆசையெல்லாம் இல்லை. சாமியாராக போக வேண்டிய என்னை மாற்றியவள் என் மனைவி என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.