தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என பல ஸ்டார் நட்சத்திரங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ட்ராக் மூலம் சிறப்பாக பயணித்து வெற்றி கொடியை நாட்டியவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கேப்டன் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த் அந்த பெயருக்கு ஏற்றார் போல ஒரு படைத்தலைவனாக வெகு சிறப்பாக வழிநடத்தினார்.
ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவராக இருந்தாலும் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை உயிர் உள்ள வரை வாழ்ந்து காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். அவரின் இழப்பு இந்த தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே பேரிழப்பு.
விஜயகாந்த் பற்றி ஊர்வசி:
அதே போல தென்னிந்திய சினிமாவின் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஊர்வசி தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பா. ரஞ்சித் தயாரிப்பில், சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜே பேபி' படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மார்ச் 8ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்படி புரொமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி, கேப்டன் விஜயகாந்த் குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
"ஐயோ இந்த பொண்ணு கூட நடிக்க முடியாதுயா... தங்கச்சி தங்கச்சின்னு கூப்பிட்டு பழகிட்டேன். அதனால லவ் சீன் எல்லாம் பண்ணும் போது என்ன அதிகம் உத்து பாக்குற சீன் எல்லாம் ஜாஸ்தி பண்ணமாட்டார். அப்படியே மழுப்பிடுவார். அதனால தான் நான் அவரோட ஒன்னு இரண்டு படம் தான் பண்ணி இருக்கேன். அவர் ரொம்ப கஷ்டப்படுவார். அநியாயத்துக்கு வெள்ளையா இருக்குதேயா இது. நான் எப்படியா தெரியுறேன் அப்படின்னு ரொம்ப கிண்டல் பண்ணிகிட்டே இருப்பார்.
தலைமை பண்பு:
அதே போல அவர் சாப்பாடு போடுறதை மறக்கவே முடியாது. அவரோட புரொடக்ஷன்ல கடைசியா 'தென்னவன்' படத்தில தான் நடிச்சேன். வித விதமா சாப்பாடு வரும். நம்ம கிராமங்களில் எப்படி சாப்பாடு இருக்குமோ அது போல களி, கூழ் எல்லாம் வரும்.
அதே போல அவர் மத்தவங்களோட பழகுற விதமே ரொம்ப பாதுகாப்பா இருக்கும். அது யாரோட ஷூட்டிங்காக இருந்தாலும் அல்லது அது எந்த இடமாக இருந்தாலும் அவர் ஒரு தலைமையில் இருந்து எல்லாரையும் பாதுகாப்பார். அது தான் விஜயகாந்த்" என நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார் நடிகை ஊர்வசி.