தமிழ் சினிமாவின் ஆல் - டைம் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய 73வது வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக பம்பரம் போல சுழன்று கொண்டு இருக்கிறார். இன்றைய இளம் நடிகர்களுக்கு எல்லாம் சரியான டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
அவரின் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்புக்கும் பின் இருந்து அவரை வழிநடத்துபவர் அவரின் அன்பு மனைவி லதா ரஜினிகாந்த். இந்த அன்பான தம்பதி அவர்களின் 43வது திருமண நாளை நேற்று (பிப்ரவரி 26 ) கொண்டாடினார்கள். ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் அப்பா அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அழகான குறிப்பு ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். "43 ஆண்டுகளாக இணைபிரியாமல் இருக்கும் என்னுடைய டார்லிங் அம்மா அப்பா. எப்போதும் ஒருவரோடு ஒருவர் உறுதியாக நிற்கிறார்கள்! 43 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் மோதிரம் மற்றும் செயினை பரிமாறிக் கொள்வார்கள். லவ் யூ போத்" என பகிர்ந்து இருந்தார். சௌந்தர்யா பகிர்ந்த புகைப்படத்தில் ரஜினிகாந்தும் லதாவும் அவர்களின் செயின் மற்றும் மோதிரங்களை காட்டுகிறார்கள்.
ரஜினியை கவர்ந்த லதா :
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'தில்லு முல்லு' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் இன்டர்வியூ எடுக்க வந்த லதாவின் அழகு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்ட ரஜினிகாந்த், உடனே லதாவின் உறவினர் ஒய். ஜி. மகேந்திரன் மூலம் அவரின் குடும்பத்தினரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். பின்னர் 1981ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
திரைத்துறையில் குடும்பம் :
இந்தத் தம்பதியினருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள். அவர்கள் இருவருமே திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதே போல பல ஆண்டுகளுக்கு முன்னர் மகள் சௌந்தர்யா இயக்கிய அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படத்தில் லீட் ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். லதா ரஜினிகாந்தும் ஒரு தொழிலதிபர், தயாரிப்பாளர் மற்றும் பாடகியாக இருந்துள்ளார்.
வேட்டையன் ஷூட்டிங் :
தற்போது நடிகர் ரஜினிகாந்த் த.சே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். புதுச்சேரியில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் நடைபெறும் ஷூட்டிங் ஷெட்யூலுக்காக அங்கே விரைந்துள்ளார்.
லேட்டஸ்ட் அப்டேட் :
மேலும் நடிகர் ரஜினிகாந்த் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டாக அவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலா தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.