கேரள தேசத்தில் பிறந்து மலையாளத்தில் மட்டுமல்லாமல் இன்று உலகம் முழுவதும் அறியப்படும் நடிகராக இருப்பவர்தான், ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘லாலேட்டேன்’. பள்ளிப்படிப்பில் சராசரி மாணவனாக திகழ்ந்த இவர், கலையின் மீதிருந்த ஆர்வத்தால், பள்ளி நாடகங்களில் ஆர்வத்துடன் நடித்தார். இதனால், தனது 6-ஆம் வகுப்பிலேயே பள்ளியில் சிறந்த நடிகனாக தேர்வு செய்யப்பட்டார். 6-ஆவது வகுப்பில் சிறந்த நடிகனாக தேர்வுசெய்யப்பட்ட இந்த லால், 60 வயதிற்கு மேலேயும் சிறந்த நடிகனாக விளங்கி தென்னிந்திய சினிமா உலகையே ஆச்சர்யபடவைக்கிறார்.


ஒவ்வொரு கலைஞனுக்கும் தனது முதல் முயற்சி தோல்வி அல்லது சரியாக அமையாமல் இருக்கும். அதுபோலவே, மோகன் லாலுக்கு அமைந்தது. 1978-ஆம் வெளியான தனது அறிமுக படமான ’திரையோட்டினம்’ என்ற மலையாளப் படம்  சென்சார் போர்டு பிரச்னை காரணமாக வெளிவராமலே போனது. சிறந்த நடிகனாக இருந்த அவருக்கு இது ஏமாற்றத்தை கொடுத்தது. 1980-ஆம் வெளியான ‘மஞ்சில் விரிஞ்சி பூக்கள்’ படம்தான் இவரை ஹீரோவாக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. வெற்றியாக அமைந்த இந்தப் படத்தில் முரண்பட்ட கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.




அதன் பிறகு மோகன்லால் அசுர வளர்ச்சி கண்டார். 1983-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். அவரது நண்பனும் கல்லூரியில் சக மாணவருமான இயக்குநர் ப்ரியதர்ஷனின் அறிமுகத் திரைப்படமான ‘பூச்சைக்கு ஒரு மூக்குத்தி’ என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். ‘டி.பி. பாலகோபாலன் எம்.ஏ.’ என்ற திரைப்படம் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றுக்கொடுத்தது. இதனைத்தொடர்ந்து, நிழலுலக தாதாவாக நடித்த ’ராஜாவின்டே மகன்’ என்ற படம் மலையாளத் திரையுலகில் மோகன்லாலை ஒரு சூப்பர் ஸ்டாராக வெளிப்படுத்தியது. 80-களைத் தொடர்ந்து 90-களில் இன்னும் வேகமாக வளரத் தொடங்கினார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படமான ’சந்திரமுகி’, மோகன்லால் நடித்த ’மணிச்சித்திரத்தாழ்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் இவரை வியாபார ரீதியாக அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்சென்றதே என்று சொல்லலாம்.




பிரபுவுடன் சேர்ந்து ‘சிறைச்சாலை’ படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதில், அந்தமான் சிறைச்சாலையில் மாட்டிக்கொண்ட சிறைக்கைதியாக நடித்து அசத்தியிருப்பார். இந்தப் படம் மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இளையாராஜா இசை அமைத்தார். அனைத்து பாடல்களுமே ஹிட்டடித்தன. மலையாளத்தில்  நடிப்பு திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்த லாலேட்டன், தமிழில், இந்தியாவின் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் எம்ஜிஆராக நடித்தார். எம்ஜிஆரை, தங்கள் காலத்தில் பார்க்காதவர்களை, எம்ஜிஆர் இப்படித்தான், இருந்திருப்பாரோ என்று நினைக்க வைத்தார் இந்த நடிப்பு அரக்கன். உலக அழகி ஐஸ்வர்யாராயின் முதல் ஹீரோவும் நம்ம லாலேட்டன்தான்.




இவர் நடித்த  ‘குரு’ படம் தென்னிந்திய மொழிகளில் இருந்து முதல்முறையாக சிறந்த அயல்மொழித் திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டது. மோகன்லால் ஒரு தன்னியல்புடன் கூடிய நடிகராக, ஒரு கேரக்டரின் உள்ளுணர்வுகள் மற்றும் மனக்குமுறல்களை எளிதாகவும் மிகவும் விரைவாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராவார். இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப நம்பக்கூடிய முகபாவங்களை அசால்டாக வெளிப்படுத்தி மிரளவைப்பார். மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என 350க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன்லால், 5 தேசிய விருதுகள், 9 கேரள அரசின் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை நடிப்பிற்காக வாங்கியுள்ளார். நடிப்பில் சிறப்பாக பங்காற்றி வந்த லாலுக்கு 2001-ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. 2009-ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கலோனல் பட்டத்தை வழங்கி மேலும் அவரை சிறப்பித்தது.





இன்னும் அதே துடிப்புடன், இளம் நடிகர்களுடன் போட்டிபோட்டு நடித்துக்கொண்டிருக்கும் மோகன்லால், மேலும் பல விருதுகள் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துவோம், அவர் தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடும் இன்றைய தினத்தில்... பிறந்தநாள் வாழ்த்துகள் லாலேட்டா..!