கூலி


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் , உபேந்திரா, நாகர்ஜூனா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ் , மலையாளம் , தெலுங்கு என ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகரை தேர்வு செய்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார் லோகேஷ் கனகராஜ் . குறிப்பாக பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் உபேந்திரா பல ஆண்டுகள் கழித்து தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.


நடிகர், இயக்குநர் , பின்னணி பாடகர் , அரசியல்வாதி என பன்முகத்தன்மைக் கொண்ட நடிகர் உபேந்திரா.  தமிழில் உபேந்திரா விஷால் நடித்த சத்யம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது. சத்யம் திரைப்படம் பெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து தமிழில் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் அவர் மீண்டு நடிக்கவிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கூலி படம் குறித்து நடிகர் உபேந்திரா தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்


சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான்






" என்னுடைய படத்தின் வேலையாக நான் சென்னை வந்திருந்தேன். அப்போது எனக்கு லோகேஷ் கனகராஜிடம் இருந்து ஃபோன் வந்தது. அவர் கூலி படத்தின் ஒன்லைனை மட்டும் என்னிடம் சொன்னார். அதற்கு பிறகு எனக்கு நீங்கள் கதை சொல்ல வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். ரஜினி படத்தில் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. என்னைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். " என்று கூலி படம் பற்றி நடிகர் உபேந்திரா தெரிவித்துள்ளார்


வேட்டையன்


ரஜினியின் வேட்டையன் படத்தை இயக்குநர் த.செ ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , துஷாரா விஜயன் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங்  உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. வேட்டையன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.