தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ஆகியன ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் ரிலீசாகும் என கூறப்பட்ட படங்களுடன் ஜனவரியில் ரிலீஸ் ஆக இருந்து, கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்களும் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றன. பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 18 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் எப்போதும்போல முதல் ஆளாக விஷாலே இம்முறையும் வருகிறார். ஜனவரி 14, ஜனவரி 26 என அறிவித்து அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டு வந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட பிறகு தியேட்டரில் ரிலீசாகும் பெரிய நடிகரின் முதல் தமிழ் படம் இது தான்.






அதற்கு அடுத்த வாரமான வேலன்டைன்ஸ் வாரத்தில் இம்முறை காதல் திரைப்படமான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' கொடுப்பார் விஜய் செதுப்பது என்று எதிர்பார்த்த நிலையில், மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி உடன் வருகிறார். அதே தேதியில் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் வெளியாகிறது. ஆர்ஆர்ஆர் படம் மார்ச் மாதம் ரிலீஸ் என சொல்லி விட்டதால், அடுத்தபடியாக இருக்கும் பெரிய படமான அஜித்தின் வலிமை மற்றும் பிரபாசின் ராதே ஸ்யாம் படங்களின் ரிலீஸ் தான் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. இவை இரண்டுக்குமே போனி கபூர் தான் தயாரிப்பாளர். அதனால் ஒரே சமயத்தில் வெளியிட பிளான் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. லேட்டஸ்ட் தகவலின் படி, தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தால் பிப்ரவரி மத்தியில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது.



அதனால் பிப்ரவரி இறுதி வாரத்தில், அதாவது பிப்ரவரி 24 அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்டிற்கும் பொருத்தமாக இருப்பதால் பிப்ரவரி 24 ம் தேதி தான் வலிமை ரிலீசாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வலிமை வந்தால் இரண்டு வாரங்களுக்கு வேறு திரைப்படம் குறித்த பேச்சுக்கு இடமில்லை என்பதால், அடுத்த மாதமான மார்ச்சின் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளியில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வருவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இந்த படத்தின் வெளியீடு ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீட்டை பொறுத்து மாறும் என்கிறார்கள். இதனிடையே சிவகார்த்திகேயனின் டான் வெளியாவதற்கு இடம் தேடுகிறது. ஏப்ரல் 14 ற்கு பீஸ்ட், கேஜிஎஃப் திரைப்படங்கள் பிளான் செய்துள்ளதால், மார்ச் 25ஐ விட்டால் மே மாதத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் முடிந்து ஒரு வழியாக கார்த்தியின் விருமன் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.