Upcoming Hollywood Movies July 2025: உலக சினிமா சந்தையில் வரும் ஜுன் மாதத்தில் ஹாலிவுட் படங்கள் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜு மாதத்தில் ஹாலிவுட் படங்கள்:
இந்திய குறிப்பாக தமிழ் திரையுலகில் வார வாரம் டஜன் கணக்கான படங்கள் வெளியான வண்ணம் தான் உள்ளன. ஆனாலும் பிரமாண்டம், கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைக்களம், கண்களை பிரம்மிக்க செய்யும் காட்சிகள் போன்ற காரணிகளால் நமது மக்கள் ஹாலிவுட் படங்களையும் அதிகளவில் விரும்பி பார்க்கின்றனர். இதனால் பல பன்னாட்டு தயாரிப்பு நிறுவனங்களும், இந்திய திரைசந்தையை பயன்படுத்தி கோடிகளில் வசூலை அள்ளுகின்றன. அந்த வகையில் தான், வரும் ஜுலை மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மூன்று முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், வசூலையும் வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுராசிக் வோர்ல்ட் - ரிபெர்த்
90 கிட்ஸ் தொடங்கி அவர்கள் பெற்றெடுத்த தற்போதைய 2K கிட்ஸ் வரையிலும் மிகவும் பிரபலமான திரைப்படம் ஜுராசிக் பார்க் என்றால் அதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஏற்கனவே 6 படங்களை வெளியிட்டு கல்லா கட்டிய யுனிவெர்சல் நிறுவனம், அவெஞ்சர்ஸ் படத்தின் மூலம் பிரபலமான ஸ்கார்லெட் ஜொஹான்சனை மையப்படுத்தி ”ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த்” என்ற புதிய படத்தை உருவாக்கியுள்ளது. ஜுராசிக் பார்க் தீவில் உள்ள டைனோசர்களின் மரபணு மாதிரிகளை சேகரிக்க சென்ற குழு, எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ”ஜுராசிக் வோர்ல்ட் ரிபெர்த்” திரைப்படம் ஜுலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது 2 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மேன்:
காமிக் வர்த்தகத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த மார்வெல், சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறது. ஆனால், முதல் இடத்தில் இருந்த டிசி காமிக்ஸ் தனது கதைகளை சினிமாக்களாக மாற்றுவதில் தடுமாறி வருகிறது. அடுத்தடுத்து வெளியான படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், டிசிக்கு ஒரு விடிவுகாலம் வராதா? என ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் ஜேம்ஸ் கன் பொறுப்பேற்று புதிய டிசி சினிமாடிக் யுனிவெர்ஸை வடிவமைத்துள்ளார். அதிலிருந்து முதல் படமாக சூப்பர் மேன் திரைப்படம் வரும் ஜுலை 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெற்றி தான் ஒட்டுமொத்த டிசி யுனிவெர்சின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க உள்ளது என்பதால், ரசிகர்கள் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். மனிதர்கள் ஏலியன்களை கடவுளாக வழிபடக்கூடாது என கருதும் கோடீஸ்வரரான லெக்ஸ் லூதர், சூப்பர் மேனை அழிக்க நினைக்கும் முயற்சிகளை மையப்படுத்தியே இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இது 2 மணி நேரம் 9 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்டாஸ்டிக் 4
இந்தியாவில் மார்வெல் திரைப்படங்களுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. அந்நிறுவனம் சார்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்திற்கான தொடக்கப்புள்ளியாக, உருவாகியுள்ள ஃபென்டாஸ்டிக் 4 திரைப்படம் உருவாகியுள்ளது. மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் தம்பதிக்கு பிறக்கும் ஃப்ராங்க்ளின் ரிச்சர்ட்ஸ் எனும் குழந்தையை, தேடி வரும் கேலக்டஸை நான்கு சூப்பர் ஹீரோக்களும் சேர்ந்து எப்படி தடுத்தனர் என்பதே இந்த படத்தின் கதையாகும். மார்வெல் சினிமாடிக் யுனிவெர்சில் முதல்முறையாக அறிமுகமாகும் கேலக்டஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்களை குறித்தும் அறிந்து கொள்ளவும், இது டூம்ஸ்டே படத்திற்கு எப்படி அடித்தளமிடப்போகிறது என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜுலை 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் நீளம் கொண்டுள்ளது.
கல்லா கட்டப்போவது யார்?
ஒரே மாதத்தில் ஜுராசிக் வோர்ல்ட் - ரிபெர்த், சூப்பர் மேன் மற்றும் ஃபென்டாஸ்டிக் ஃபோர் என, மூன்று பெரும் பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மார்வெல் திரைப்படங்களுக்கு என தனி வர்த்தகம் இருப்பதால் கல்லா கட்டுவதில் எந்த குறைச்சலும் இருக்கது. அதேநேரம், மார்வெல் திரைப்படங்களை பார்த்து சளித்து போனவர்களுக்கு சூப்பர் மேன் திரைப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அதிலும் சூப்பர் ஹீரோக்களிலேயே மிகவும் பிரபலமானவர் சூப்பர் மேன் என்பது அதன் வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தலாம்.
அதேநேரம், எந்த ஒரு காலத்திலும் சோடை போகாத கதைக்களம் என்றால் அது டைனோசர்களை அடிப்படையாக ஜுராசிக் பார்க் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த படங்களை விரும்பி பார்ப்பர். அந்த வகையில் வரும் ஜுலை மாதத்தில் வெளியாகும் மற்ற இரண்டு படங்களை காட்டிலும், ஜுராசிக் வோர்ல்ட் - ரிபெர்த் இந்தியாவில் அதிக வசூலை வாரிக்குவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.