உன்னிகிருஷ்ணன் உச்சரிப்பில் நேர்த்தியும் உயிரைக் கரைக்கும் குரலில் ஒரு தனித்துவமும் கொண்டு கர்நாடக இசை உலகிலும் மெல்லிசை உலகிலும் 30 ஆண்டுகள் பயணத்திருக்கிறார். அந்தப் பயணம் அவ்வளவு சாதாரணமானது அல்ல. எந்த வித அலட்டலும் அலப்பறைகளும் இல்லாமல் சாதித்து ஒரு இசை வாரிசையையும் தன் மகள் வாயிலாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
அவருக்கு இன்று (ஜூலை 9) பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளை ஒட்டி அவர் அளித்த நேர்காணல்களின் தொகுப்பிலிருந்து பல சுவாரஸ்யமான தகவல்களைக் காண்போம்.
எனக்கு கிரிக்கெட் தான் கனவாக இருந்தது..
என் சிறு வயதில் எனக்கு கிரிக்கெட் தான் பெருங்கனவாக இருந்தது. அம்மா தான் எனக்கு இசை ஆர்வத்தை விதைத்தார். இசையை கற்றுக்கொள்ளச் செய்தார். என் சிறு வயதில் இப்போது இருப்பதுபோல் தொலைக்காட்சி வாய்ப்பெல்லாம் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. அதனால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனக்கு இலக்கு என்றும் பெரிதாக இல்லை. ஆனால் நான் கற்றுக் கொண்டதை ஒழுங்காக கற்றுக் கொள்வேன். ஆனால் எனக்கு எல்லாம் தானாக வந்து அமைந்தது. அதை கடவுளின் ஆசி என்றுதான் சொல்வேன். அது எனக்காக எழுதப்பட்டிருந்த விதி.
ஏ.ஆர்.ரஹ்மானும் நானும்:
ரஹ்மான் ஒரு சிறந்த நண்பர். அதற்கு முன்னரே எனக்கு ராஜீவ் மேனன் நல்ல நண்பர். அவருடைய பிறந்தநாளில் நான் முதன்முதலில் ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்த்தேன். அப்புறம் என்னவளே பாடல் பாடுவதற்காக அவர் என்னை அழைத்தார். அதுதான் அவருடன் எனது பயண ஆரம்பப் புள்ளி. அதன் பின்னர் நிறைய நிறைய பாடல்களை அவர் எனக்கு கொடுத்திருக்கிறார். அவர் இசையில் நான் என்னவளே என்னவளேவும் பாடினேன், நறுமுகையே பாடலும் பாடியிருக்கிறேன் அப்புறம் சோனியா சோனியா பாடலும் பாடியிருக்கிறேன். என்னை அவர் ஒரு வெர்சடைல் சிங்கராக கொண்டு சேர்த்தார். ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல எனக்கு வாய்த்த ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் அப்படித்தான். தேவா எனக்கு கற்கண்டுகள் போன்ற பாடல்களை கொடுத்திருக்கிறார். அதில் புல்வெளி புல்வெளி பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். தேவா மனிதருள் ஒரு மாணிக்கம். நான் சிறுவயதில் மலையாளி கிளப்பில் தேவா சாரின் ஆர்கஸ்டிராவில் நான் பாடியிருக்கிறேன். அவர் இசையமைப்பாளரானவுடன் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் ஒரு நேச்சுரல் இசையமைப்பாளர்.
ராஜா சார் ட்ஃப்; யுவன் ரொம்ப ஃப்ரீ:
இளையாராஜா சார்கிட்ட வேலை செய்வது தான் ரொம்ப சிரமம். அவருடைய பாடல் கேட்க ஈஸியாக இருக்கும். ஆனால் அதைப் பாடுவதற்கு அவ்வளவு சிரமமாக இருக்கும். ரோஜாப்பூந்தோட்டம் காதல் வாசம் பாடல், சேது படத்தில் மாலை என் வேதனை கூட்டுதடி பாடலும் அவர் இசையில் நான் பாடியிருக்கிறேன். ராஜா சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனால் யுவன் ரொம்ப ரொம்ப ஃப்ரீ. அவர் டியூனைக் கொடுத்துவிடுவார். நீங்கள் பாடிவிடுங்கள் சார் என்று முழு ஃப்ரீடம் கொடுத்துவிடுவார். அந்த சுதந்திர பாடல் தான் சென்யரீட்டா பாடல். அது போல் நெஞ்சோடு கலந்திடு உறவாடு என்ற பாடலும் அவ்வளவு இனிமையானது.
யுவனுக்கு ஆடியன்ஸ் பல்ஸ் அறிந்த இசையமைப்பாளர். கார்த்திக் ராஜா என்னைப் பொருத்த வரையிலும் மோஸ்ட் டேலன்டட் இசையமைப்பாளர். ஆனால் அவர் ரொம்ப சூஸியாக இருப்பார். அவருக்கு ராஜா சாரின் அறிவு நிறைந்திருக்கும். அவர் இசையில் வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பாடலை நான் தான் பாடினேன். அவர் இன்னும் நிறைய படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் வேலை பார்த்ததிலேயே எஞ்சாய் பண்ணி வேலை பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர் சார் தான். சுடும் நிலவும் சுடாது சூரியன் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. எஸ்.ஏ.ராஜ்குமார் சாருக்காக நான் பாடிய இன்னிசை பாடிவரும் பாடலும் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.
கடவுள் கொடுத்தது..
நான் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்ததே இல்லை. அதுபோல் என் மகளுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அது எல்லாம் இறைவன் செயல். தேசிய விருது ஒரு பொறுப்பைக் கொடுத்தது. அதனால் தான் அவர் தொடர்ந்து பாடுகிறார் என நினைக்கிறேன். இது எல்லாமே இறைவன் செயல். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் திருப்புமுனையும் இறைவன் அருள்வது தான்.
டிவி ஷோக்கள் அழுத்தம் தரும்:
நான் நிறைய குழந்தைகள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளேன். நீங்கள் சொல்வது போல் அந்த ஷோக்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பிரஷர் தான். என்னை அத்தனை பேர் முன்னாடி சொன்னால் நானே தயங்குவேன். ஆனால் இதை ரெண்டு விதமா பார்க்கணும். குழந்தை அணுகும் முறை, பெற்றோர் ஆதரவு தரும் முறை. இரண்டுமே முக்கியம். இருந்தாலும் குழந்தைகள் ஷோ அவர்களுக்கு பிரஷர் தான். ஆனால் அழுத்தங்கள் எல்லாமே வாழ்க்கைப் பாடம் தான். வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் அவை கற்றுக் கொடுக்கும்.
காலம் மாறிப் போச்சு:
இப்ப வரும் பாடல்கள் எல்லாம் வெஸ்டர்ன் இன்ஃப்ளூவன்ஸ் இருக்கு. அதனால் அந்த மாதிரியான பாடல்கள் பாட பயிற்சியோ, முறையான் கர்நாடக இசைப் பின்னணி தேவையில்லை தான். எல்லாவற்றையும் தொழில்நுட்பம் விஞ்சிவிடாது. நிறைய இளைஞர்கள் தொழில்நுட்ப உதவியுடன் பாடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு கலைஞனும் தனக்கென ஒரு லட்சியம் வைத்திருக்க வேண்டும். இப்போ காலம் மாறிப்போச்சு. அதனால் கலைஞர்களும் மாறிவிட்டார்கள். ஒரு பாடகர் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்குவதே அவர் சாதனை. அப்படியொரு அடையாளத்தை உருவாக்குவது மிகவும் கடினம். அதை நோக்கித்தான் பாடகர்கள் முன்னேற வேண்டும்.
இப்போதைய இளைஞர்களில் சித் ஸ்ரீராம் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கியுள்ள அடையாளம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ஒரு ட்ரெண்ட் செட்டராக மாறியிருக்கிறார்.
பாடகர்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை. உதாரணத்துக்கு உதித் நாரயாணனை சொல்லலாம். ஒரே மாதிரியாகக் கேட்டு மக்களுக்கு சோர்வு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இவ்வாறு இறக்குமதி செய்கிறார்கள். உதித் வாய்ஸில் ஒரு வித்தியாசம் இருக்கும். உள்ளூரில் இருக்கும் கலைஞர்கள் இதனால் காணாமல் போகிறார்கள் என்று நான் நம்பவில்லை.
இவ்வாறு உன்னிகிருஷ்ணன் தனது இசைப்பயணம் பற்றியும் தற்போதைய இசைத்துறை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.