வார இறுதிகளில் ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸைப் பார்த்து மகிழ்வது பெரும்பாலானோரின் வாழ்வின் ஓர் பகுதியாக மாறிவிட்டது. சிலர் ஒவ்வொரு இரவும் ஒரு எபிசோட் பார்த்து, வெப் சீரிஸ்களை ரசிப்பதும் உண்டு. பல்வேறு வெப் சீரிஸ்கள் இணையத்தில் கிடைப்பதால், நேரம் இருக்கும் போது அதனைப் பலரும் கண்டு ரசிக்கின்றனர். 


பெரிதாக கண்டுகொள்ளப்படாத க்ரைம் சீரிஸ்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. 


1. நக்சல்பாரி



Zee5 தளத்தில் வெளியாகியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் சீரிஸ், ரகசிய காவல்துறை உளவாளி ஒருவன் நக்சல் எழுச்சி குறித்த ஆதாரங்களைக் கண்டுபிடித்து, அதனைத் தடுப்பது பற்றிய கதையாகும். இதில் ராஜீவ் கண்டேல்வால், டீனா தத்தா, சத்யதீப் மிஷ்ரா, ஆமிர் அலி முதலான தேர்ந்த நடிகர்கள் நடித்திருப்பதோடு, இந்த வெப் சீரிஸ் இதுவரை சுமார் 10 மில்லியன் வியூஸ்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


2. மஹாராணி



1990களில் பீகார் மாநிலத்தின் அரசியல் சூழலில், ராணி பாரதி என்ற பெண்ணின் கதையைப் பற்றிய வெப் சீரிஸ் `மஹாராணி’. பீகாரின் முதல்வரின் மனைவியான ராணி பாரதி என்ற இல்லத்தரசி, கணவருக்கு ஏற்படும் விபத்துக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்கிறார். அதன்பின் நிகழும் அரசியல் சதுரங்க ஆட்டம் தான் `மஹாராணி’. ஹூமா குரேஷி நடித்துள்ள இந்தத் தொடர், சோனி லிவ் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்தத் தொடரைப் பார்க்கலாம். 


3. மாஃபியா



கல்லூரி நண்பர்கள் 6 பேர் நீண்ட காலத்திற்குப் பிறகு, பார்ட்டிக்காக ஒன்று சேர, கடந்த காலத்தைச் சேர்ந்த பிரச்னை ஒன்று அவர்களைப் பின்தொடர்கிறது, சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரை Zee5 தளத்தில் பார்க்கலாம். நுனி சீட்டில் அமர வைக்கும் த்ரில்லர் எனப் பலராலும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது `மாஃபியா’. 


4. டாயிஷ்



பிரபல இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கியுள்ள இந்தப் படம் Zee5 தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படம் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 6 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், லண்டனில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இரு பால்ய கால நண்பர்களைப் பற்றிய கதையாக `டாயிஷ்’ உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் கேங் ஒன்றுடன் மோதலில் சிக்கிக் கொள்பவர்களாக புல்கித் சாம்ராட், ஹர்ஷவர்தன் ரானே, ஜிம் சார்ப் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். 


5. அபய்



நல்ல க்ரைம் த்ரில்லர்களை விரும்புபவர்கள் Zee5 தளத்தில் `அபய்’ தொடரின் இரண்டு சீசன்களைப் பார்க்கலாம். இதன் அடுத்த சீசனும் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலான வழக்குகளில் துப்பு துலக்குவதும், தனது பெர்சனல் பிரச்னைகளில் கவனம் செலுத்துவம் என இரு வகையான வாழ்க்கையையும் கையாளும் இளம் அதிகாரியைப் பற்றிய கதை `அபய்’. இதில் குணால் கெம்மு, ஆஷா நேகி, இந்திரனில் சென்குப்தா, நிதி சிங் முதலானோர் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.