மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜ் எடுத்துள்ள வாழை படம் நிகழ்த்தப்போகும் மேஜிக்கை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த மாமன்னன் கடந்த 29ம் தேதி திரைக்கு வந்தது. இதில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து அசத்தியுள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் வாழ்வின் வலியை உணர்த்தியுள்ளன. தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சாதி அரசியலை எடுத்து கூறும் மாமன்னனுக்கு திரைப்பிரபலங்களும் வரவேற்பு அளித்தனர். வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை மாமன்னன் படைத்து வருகிறது.
மாமன்னனில் எம்.எல்.ஏ.வாக வரும் வடிவேலு தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவரை சுற்றி நடக்கும் அரசியல் ஆதிக்கமும், சாதிய ஆணவத்தயும், அடக்குமுறையும் திரையில் காட்டி இருப்பார் மாரி செல்வராஜ். எப்போதும் காமெடி நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட வடிவேலு நடிப்பின் முதிர்ச்சியாலும், மாமன்னன் கேரக்டரை திரையில் தாங்கி நின்று அசத்தி இருப்பார். காமெடி நடிகராலும் ஒரு லீட் ரோல் கொடுக்க முடியும் என்பதை மாமன்னன் மூலம் வடிவேலு நிரூபித்துள்ளார். நீண்ட நாள் சினிமாவை விட்டு ஒதுங்கிய வடிவேலுக்கு மாமன்னன் மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. மாமன்னனை பார்த்த பலரும் அதிமுகவின் முன்னால் சபாநாயகர் தனபாலின் கதையை படமாக எடுத்துள்ளதாக கருத்துகள் கூறி வந்தனர். அதனால் படத்துக்கு அதிகளவில் நேர்மறையான விமர்சனங்கள் வந்தன.
இதேபோல் மாமன்னனில் அதிவீரனாக வரும் உதயநிதி ஸ்டாலின், அடக்குமுறையின் வலிகளை கொண்ட இளைஞனாகவும், ஆக்ரோஷமும், இறுக்கமும் கொண்ட ஒரு கேரக்டராகவும் படம் முழுக்க வலம் வந்து இருப்பார். ஆதிக்க வர்க்கத்தின் முன்பு சமமாக உட்காரவே முடியாமல் கூனி குறுகி நிற்கும் தந்தையை தலையை நிமிற செய்ய அதிவீரன் எடுக்கும் ஒவ்வொரு செயலும், எதார்த்த நடிப்பும் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. மிகைப்படுத்தாத நடிப்பை கட்டி, அதிவீரனாக ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பை வெளிபடுத்தி, கச்சிதமான வசனங்களை தேவைப்படும் இடத்தில் பேசியதால் உதயநிதி ஸ்டாலினுக்கு தியேட்டர்களில் சபாஷ் சொல்ல வைத்தது.
மாமன்னன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜின் அடுத்தப்படமாக ‘வாழை’ எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பை கடந்த ஆண்டு நவம்பரில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இந்த படத்தில், கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் நடித்துள்ளார். சிறுவர்களை மையப்படுத்தி எடுத்து இருக்கும் வாழை படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் வியந்து மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவில் “வாழை உங்களின் சிறந்த படைப்பு. மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்” புகழ்ந்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் வரிசையில் மாரி செல்வராஜ் எடுத்துள்ள வாழை படம் விரைவில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகு என எதிர்பார்க்கப்படுகிறது.