மாமன்னன் திரைப்படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவிற்கு எங்கள் அன்பும் நன்றியும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மாமன்னன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் பரிசளிக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் நடிகர் வடிவேலுவின் வீட்டிற்கு சென்று அவரை மாலை அணிவித்து பாராட்டினார். மேலும் படத்தில் இளம் அதிவீரன் ரோலில் நடித்த மாணவர் சூர்யாவுக்கு உதயநிதி லேப்டாப் பரிசளித்தார். படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.  


இந்த நிலையில் மாமன்னன் படத்தை வெற்றிபெற செய்த மக்களின் பேராதரவுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: ”மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250-க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாமன்னன் படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும்”. என தெரிவித்துள்ளார்.






மாமன்னன் திரைப்படம் முதல் நாளில் ரூ. 6 கோடி வரை வசூல் செய்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமன்னன் ஷோவுக்கு பல தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆனதாக தகல்கள் வெளியாகின. இந்நிலையில் 'மாமன்னன்' திரைப்படம், 7 நாட்கள் முடிவில் 48 கோடி முதல் 50 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.