சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பை பெற்றவரும், தலைவர் மு.க ஸ்டாலினின் நண்பருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினி சாருக்கு என் வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே' விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், குருநாதர் பாலச்சந்தருக்கும், ஓட்டுநரான நண்பருக்கும், அவரது அண்ணன் சத்யநாராயணாவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. முன்னதாக, பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன், எல்.வி.பிரசாத், நாகி ரெட்டி உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன்(1996), இயக்குநர் பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருமே மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.