நான் ஒரே பாட்டில் எல்லாம் அமைச்சராகவில்லை. நான்கரை ஆண்டுகள் உழைத்து தான் அமைச்சர் ஆனேன் என நடிகரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக  “கண்ணை நம்பாதே” படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ஆத்மிகா நடிக்கிறார். மேலும் பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்ளிட்ட பலரும் கண்ணை நம்பாதே படத்தில் இணைந்துள்ளனர். சித்துக்குமார் இசையமைக்கும் இப்படம் மார்ச் 17 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 


இதனிடையே இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் நடிகரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்  பங்கேற்று கலகலப்பாக படம் குறித்த நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் தனது உரையில், “கண்ணை நம்பாதே படம் 4 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. என்னோட கேரியரில் இத்தனை ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படம் இதுதான். 2018 ஆம் ஆண்டின் இறுதியில் இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் பார்த்துவிட்டு அருள்நிதிக்கு போன் பண்ணி வாழ்த்து சொன்னேன். அதனால் அவர் எனக்கு அப்படத்தின் இயக்குநர் மாறனை என்னிடம் அனுப்பி வைத்தார். இவர் என்னிடம் முதலில் சொன்னது உருகவைக்கும் காதல் கதை. ஆனால் நான் அப்ப இருந்த மைண்ட் செட்டிற்கு க்ரைம் த்ரில்லர் படம் பண்ணலாம் என நினைத்தேன்” என கூறியுள்ளார். 


மேலும், “இப்ப இரண்டு வாரம் படம் ஓடுனாலே வெற்றி தான். முதலில் கண்ணை நம்பாதே படம் ரிலீஸ் ஆகுமா என்றே சந்தேகம் இருந்தது. இப்ப இசை வெளியீட்டு விழா, பிரஸ் மீட்-ன்னு நடந்துட்டு இருக்கு. படத்துல 2 பாடல்கள் இருக்கு. எந்த பாடலுமே இல்லாம தான் நானும், ஆத்மிகாவும் ஷூட்டிங்கில் நடிச்சோம். குறிப்பாக கண்ணை நம்பாதே பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நான் 5 கெட்டப்பில் வருகிறேன். முதலில் கண்ணை நம்பாதே, கலகத் தலைவன், நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் கெட்டப்பில் வருவேன். இந்த படம் ஆரம்பிச்ச பிறகு நான் 3 படம் பண்ணிட்டேன். எல்லா படத்தின் ஷூட்டிங்கிற்கும் மாறன் வருவார். 


கொரோனா பிரச்சினையால் படம் தடைபட்டது. இரவு நேரம் ஆனால் கேமரா தூக்கிட்டு போவோம். அதுவும் படம் தாமதம் ஆக ஒரு காரணமாக அமைந்தது. அதேசமயம் இந்த படம் ஆரம்பிக்கும்போது நான் அரசியலுக்கு வருவானேன்னு கூட தெரியாது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம், இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ., இன்னைக்கு அமைச்சர் ஆகியிருக்கேன். இந்த நான்கரை ஆண்டுகள் நான் உழைத்து தான் அமைச்சர் ஆனேன்” எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.