நான் திரும்ப படம் நடிக்க வந்தால் கண்டிப்பாக அது  மாரி செல்வராஜின் படமாக இருக்கும் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். e


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “மாமன்னன்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், “ எல்லாருமே பேசும் போது, ‘இது என்னோட கடைசிப்படம்..கடைசிப்படம்’ என்று சொன்னார்கள். நானே ஒரு முறை தான் சொல்லியிருப்பேன். ஆனால் அப்படி சொல்லித்தான் மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, கீர்த்தி சுரேஷின் தேதிகளை வாங்கினேன். இந்த படம் நடந்து கொண்டிருக்கும் போது, கமல் தயாரிப்பில் நடிக்கப் போகிறேன் என்ற தகவல் வெளியானது. இதனைக் கேட்டு ரொம்ப அப்செட் ஆனது மாரி செல்வராஜ் தான். என்ன என்னை ஏமாத்திட்டீங்க? என கேட்டார்.


அதேமாதிரி ஏ.ஆர்.ரஹ்மானும் கடைசி படம்ன்னு சொன்னீங்க என கேட்டார். நான் இல்ல கமல் சார் படம் என சொன்னேன். அதற்கு ரஹ்மான், ‘சரி பண்ணுங்க. அப்ப இதுதான் உங்க முதல் படம் போல’ என வாழ்த்தினார். மாரி இந்த கதையை என்னிடம் சொல்லிவிட்டு ஒரு கேரக்டரில் வடிவேலுவை நடிக்க வைப்பது குறித்து கேட்டார். நான் சூப்பராக இருக்கும் என கூறினேன். அதன்பிறகு ஒரு முடிவு பண்ணினோம்.


வடிவேலு நடிக்கவில்லை என்றால் இந்த படம் இல்லை, வேறு கதை பண்ணலாம் என  நினைத்தோம். ஆனால் கதை கேட்டு அவர் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தின் மாமன்னன் வடிவேலு தான். மாரி செல்வராஜூக்கு முன்னதாக துருவ் விக்ரமின் படம் ஒன்று இருந்தது. ஆனால் என்னுடைய கடைசிப்படம் என சொல்லி இதனை இயக்க வைத்தேன். 80 நாட்கள் ஷூட்டிங் என சொல்லி சேலத்திற்கு அழைத்துச் சென்றார்.


ஆனால் 100 நாட்களை தாண்டி சென்றது. அதன்பிறகு ஷூட்டிங் முடிந்து கேக் எல்லாம் வெட்டி சென்னைக்கு வந்து விட்டோம். அதன்பிறகு எடிட் பண்ணி படத்தை போட்டு காட்டினார். எல்லாம் நல்லா இருந்துச்சு. அதன்பிறகு ஒரு மாசம் கழித்து 3 நாட்கள் ஷூட்டிங் போலாமா என கேட்டார். ஒரு இடத்தில் இன்னும் கொஞ்சம் எடுக்கலாம் என சொன்னார். நானும் சரி என போய் நடித்துவிட்டு வந்தேன். திரும்ப 2 நாட்களுக்கு முன்பு போன் பண்ணினார்.


இன்னும் ஒரு நாள் ஷூட்டிங் போலாமான்னு கேட்டார். இதுதான் என் கடைசி படம் என சொன்னேன். இன்னும் 3 வருஷம் கழிச்சி ஒருவேளை நான் நடிக்க வந்தால், கண்டிப்பாக மாரி செல்வராஜ் இயக்கமாக தான் அந்த படம் இருக்கும். அவரை நான் இயக்குநர் என்றே சொல்ல மாட்டேன். அவர் ஒரு மேஜிக் மேன். சீன் பேப்பர் கொடுக்க மாட்டார். 10 நாள் ஷூட் பண்ணிட்டு திரும்ப எடுக்கணும் என சொல்லுவார்.


முதலில் என்னை வைத்து 10 நாட்கள் ஷூட் பண்ணிவிட்டு சென்னைக்கு அனுப்பி விட்டார். இதற்கிடையில் வடிவேலுவை வைத்து காட்சிகளை எடுத்து விட்டார். திரும்பவும் நானும், கீர்த்தியும் ஷூட்டிங் போனோம். அப்ப வடிவேலு நடிச்ச 10 நிமிட காட்சிகளை போட்டு காட்டினார். அதனைப் பார்த்து வார்த்தைகளே வரவில்லை. உடனே வடிவேலுவை பார்த்து அவரை கட்டியணைத்து பாராட்டினேன். அவரின் நடிப்பை நாங்கள் ஈடு செய்ய வேண்டும் என மாரி செல்வராஜ் சொன்னார். என்னோட கேரியர்ல பெஸ்ட் படமாக மாமன்னன் அமைந்துள்ளது.