நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய காதல் கதையை கலகலப்பாக தெரிவித்துள்ளார் 


ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியான மாமன்னன் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை நிறைவுச் செய்தார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், சுனில் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 


இதனிடையே மாமன்னன் படத்துக்கு ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் உதயநிதி பல நேர்காணல்களில் பங்கேற்று சினிமா, அரசியல், குடும்பம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார். அதில் ஒரு நேர்காணலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் தான் உதயநிதி முதல்முறையாக காதலிப்பதை சொன்னதாக தெரிவித்திருந்தார். அதைப்பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு, “2001 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அப்பா எனக்கு நண்பர் மாதிரி. அப்பா, அம்மா 2 பேரையும் ஒன்னா வச்சிகிட்டு, ‘அப்பா நான் உங்ககிட்ட தனியா பேசணும்’ என சொன்னாலே அங்க எல்லாம் முடிஞ்சிட்டுன்னு அர்த்தம். அதனால் காதலிப்பதை முதலில் அப்பாவிடம் சொன்னேன். அவரோ அம்மாவிடம் கலந்து பேசி சொல்வதாக சொன்னார்கள். எனவே எந்தவித பிரச்சினையும் இல்லாமல் போனது. 


கிருத்திகா வந்து 12 ஆம் வகுப்பு, நான் வந்து காலேஜ் முதலாம் ஆண்டு படிக்கும் போது காதலிக்க ஆரம்பித்தோம். ஒரு 7,8 ஆண்டுகள் காதலித்தோம். அந்த சமயத்துல எங்க வீட்டுல காதல் கல்யாணம் பண்ணிக்கலன்னா ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிடாங்க. ஏகப்பட்ட காதல் திருமணம் நடந்துச்சு. காதல் இல்லைன்னு சொன்னா என்ன காரணம் கேட்க ஆரம்பிச்சிருவாங்க. எங்க குடும்பத்துல முதல் காதல் திருமணம் என்றாலே கலாநிதி மாறன் கல்யாணம் தான். அப்பவே எனக்கும், கிருத்திகாவுக்கும் காதல் ஆரம்பித்து இருந்தது. 


எங்க வீட்டுல காதல் திருமணம் எல்லாம் சாதாரணமா மாறிடுச்சி. என் பையனும் இப்ப என்னை விட பெரிய லூட்டில்லாம் அடிச்சிட்டு இருக்கான். இருந்தாலும் பார்த்து, உன் வயசுக்கு தகுந்த மாதிரி பண்ணுப்பா என அட்வைஸ் செய்தேன்” என உதயநிதி ஸ்டாலின் அந்த நேர்காணலில் தெரிவித்தார்.