TNPL 2023: ஐபிஎல் தொடரை தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதளவும் வரவேற்கப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7வது சீசன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 19 போட்டிகள் நடந்த நிலையில் நேற்று நடந்த 20வது போட்டியில்  திருப்பூர் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. சேலம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணி, நல்ல தொடக்கத்தினை தொடக்க ஜோடியான ராதாகிருஷ்ணன் மற்றும் துஷார் ரஹேஜா கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 41 ரன்களில் இருந்தபோது ராதாகிருஷ்ணன் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய சாய் கிஷோர் சிறப்பாக தொடங்கினார். ஆனால் அதற்குள் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் துஷாரும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஆனால் சிறப்பாக பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சாய் கிஷோர் திண்டுக்கல் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். 35 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 45 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 


அதன் பின்னர் விஜய் சங்கர், பாலச்சந்தர் அனிருத், ரவீந்திரன் விவேக் தங்களது பங்களிப்பையும் அணிக்கு வழங்கினர். இதனால் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. திருப்பூர் அணி தனது மூன்று விக்கெடுகளை ரன் - அவுட் முறையில் இழந்தது குறிப்பிடத்தக்கது. 


அதன் பின்னர் 174 ரன்களை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணி, முதல் விக்கெட்டை 34 ரன்களில் திண்டுக்கல் அணி இழந்ததால், திருப்பூர் அணிக்கு நம்பிக்கை கிடைத்தது. அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டை 69 ரன்களில் கைப்பற்றியது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிவம் சிங், நிலைத்து நின்று ஆடி, திருப்பூர் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இவருடன் இணைந்த ஆதித்யா கணேஷும் ருத்ரதாண்டவ ஆட்டத்தினை வெளிப்படுத்த, போட்டி முழுவதும் திண்டுக்கல் அணி வசம் சென்றது. 


இறுதி வரை களத்தில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் 57 பந்துகளைச் சந்தித்து 74 ரன்கள் சேர்த்தார். இவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 11 பவுண்டரிகள் விளாசியிருந்தார். அதேபோல், ஆதித்யா கணேஷ் 30 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 59 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். 


இறுதியில் திண்டுக்கல் அணி 18.3 ஓவரில்  2 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. திருப்பூர் அணி சார்பில் 13 எக்ஸ்ட்ராக்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது.  இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தினை தக்கவைத்துள்ளது. மேலும், திருப்பூர் அணி 6வது இடத்திலும் உள்ளது.