இன்று மாமன்னன் படம் வெளியானதையொட்டி அப்படக்குழு, செய்தியாளர் சந்திப்பில் பங்குபெற்றது.
முதலில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது, “இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்ற பயம் எனக்கு இருந்தது. கதையை சொன்னவுடன் ஒப்புக்கொள்ள மாட்டர் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமில்லாமல், இக்கதையை விரிவுபடுத்தவும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார். உதய் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது சாதாரண விஷயம் கிடையாது. பல நட்சத்திரங்கள் நடித்ததால்தான் இப்படம் மக்களிடம் சென்றடைந்தது. கருத்தும் என் ஆசையும் நிறைவேறுமா என்பது தெரியாது. என் ஆசையை நிறைவேற்றிய உதய் சாருக்கு நன்றி. அப்புறம் ரஹ்மான் சார், படத்தை புரிந்து கொண்டு என் இண்டென்ஸை புரிந்து கொண்டு பலமான இசையையும் இமோஷனலான இசையையும் கொடுத்து படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார். அவருக்கும் நன்றி. கேமரா மேன், உதவி இயக்குநர்கள் எல்லோருக்கும் நன்றி. அப்புறம் கீர்த்தி, ஃபஹத் சார், வடிவேலு சார் ஆகிய மூன்று பேரும் என்னை புரிந்து கொண்டு, மாரியோட எமோஷனை புரிந்து கொண்டு ஒவ்வொருத்தரும் மாறி மாறி போட்டி போட்டு கொண்டு நடித்தனர். அதன் ரிசல்டை பார்த்து இருக்கோம். எல்லாவற்றுக்கும் நன்றி. மக்களுக்கும் நன்றி.” எனத் தெரிவித்தார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துக்கள். முழு வெற்றியும் மாரி செல்வராஜ் சார், அவருடைய எழுத்துக்கும், கீர்த்தி, ஃபஹத் சார், வடிவேலு சார், ரஹ்மான் சார், தேனி ஈஸ்வர் சார், மற்ற நடிகர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு சமர்பணம். ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை ஷூட் பண்ணோம். 6 மாச 7 மாச உழைப்பு. அந்த உழைப்பை மக்கள் வரவேற்கும் போது கொண்டாடும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய வரவேற்புக்கு நன்றி.” என்றார்.
செய்தியாளர் ஒருவர் மீண்டும் படம் நடிப்பீர்களா? இது உங்களை பூர்த்தி செய்ததா? வாய்ப்பு இருக்கா? என கேட்ட போது, “இந்த படமே எனது ஆசையை பூர்த்தி செய்துவிட்டது. இனி வாய்ப்பில்லை. வாய்ப்பில்லை ராஜா.” என சிரித்து கொண்டே பதில் கூறினார் உதயநிதி.
சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்ட போது, “அனைத்து இடங்களில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரே படத்தில் சமுதாயத்தை திருத்துகிறோம் என்று சொல்லவில்லை. நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். எங்கள் வலியை சொல்கிறோம். மக்கள் உணர வேண்டும். மக்கள் திருந்த வேண்டும். அதற்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என பேசி முடித்தார் உதயநிதி ஸ்டாலின்.