தாத்தா கருணாநிதி, மகன் இன்பநிதி பற்றி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால்  என பலரும் நடித்துள்ள மாமன்னன் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல்  உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 


நிறைவேறாமல் போன உதயநிதியின் ஆசை


இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடர்பாக படக்குழுவினர் பல நேர்காணல்களில் பங்கேற்றனர். அதில் ஒரு நேர்காணலில், நீங்கள் சினிமாவில் நடிக்க வந்தது குறித்து தாத்தா கருணாநிதி என்ன சொன்னார்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, “தாத்தாவுக்கு என்னுடைய முதல் படமான ஓகே ஓகே ரிலீஸ் ஆனதே தெரியாது. அப்ப அவரு முதலமைச்சரா பிஸியா இருந்தாரு. படம் பெரிய ஹிட். எங்களால் நம்பவே முடியவில்லை. ஒருநாள் போன் பண்ணி  ‘என்னடா படம் நடிச்சிருக்க போல.. என்கிட்ட சொல்ல மாட்டியா?’ என கேட்டார்.


நான், ‘நீங்க பிஸியா இருக்கீங்கன்னு சொல்லல’ என கூறினேன். உடனே அவர் எனக்கு உடனே படம் பார்க்கணும் என சொல்ல, தாத்தாவும், பாட்டியும் பிரசாத் லேப் தியேட்டரில் படம் பார்த்தார்கள். பின்னர் முதல் படம் மாதிரி தெரியல, நல்லா நடிச்சீருக்க என பாராட்டினார். அதன்பின்னர் இது கதிர்வேலன் காதல் படம் பிரிவ்யூ பார்த்தார். அந்த படம் பெரிய அளவில் நடிப்போ, கதையோ இல்லை. ஆனால் நல்லா பண்ணிருக்க என பாராட்டினார். அப்புறம் நான் நடிச்ச எந்த படத்தையும் பார்க்கல. ஆனால் எனக்கு மனிதன் படத்தை தாத்தாவுக்கு போட்டு காட்ட வேண்டுமென ஆசை இருந்தது. அதற்குள் உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. அது எனக்கு  நிறைவேறாத ஆசையாக போய் விட்டது. 


மகனுடனான அன்பு


இன்பநிதி என்னை விட அம்மா கிருத்திகாவிடம் தான் ரொம்ப நெருக்கமானவர். ஏதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் தான் எனக்கு போன் பண்ணுவார். போன் வந்தாலே என்ன வேணும்? என்று தான் கேட்பேன். கிருத்திகா ஏதாவது விஷயத்துக்கு ஓகே சொல்லல என்றால் அடுத்த ஃபோன் எனக்கு வரும். நான் வேண்டுமென்றே, கிருத்திகாவை வெறுப்பேற்ற, ‘உங்க அம்மா என்ன கேட்கிறது. நீ பண்ணு.  உன் வயசுல நான் என்னெல்லாம் பண்ணிருக்கேன் தெரியுமா?.. எங்க அம்மாகிட்ட கேட்டா பண்ணேன்’ என சொல்வேன். ஒருவேளை நாங்க 2 பேரும் எதுவும் வேண்டாம் என சொன்னால் அடுத்த ஃபோன் தாத்தாவுக்கு போகும். என்னோட அப்பா, அம்மாவுக்கு பேரப்பிள்ளைகள் ரொம்ப செல்லம்.