Udhayanidhi: மாமன்னன் திரைப்படம் 9 நாள்களில் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘மாமன்னன்’ திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் ஃபாசில், லால் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்துள்ளதால், படக்குழு வெற்றி விழாவை நடத்தியது.
இவ்விழாவில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: ‘’இப்படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலு தான். இப்படம் எவ்வளவு சீரியஸான படமோ அதே அளவிற்கு படப்பிடிப்புத் தளம் அவ்வளவு ஜாலியாக இருந்தது.
இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாள் உட்பட அனைத்து பொருட்களும் (துப்பாக்கியைத் தவிர) உண்மையான பொருட்கள், பிரச்சாரம் செய்யப்படும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், நான் மற்றும் எனது தந்தை (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனங்கள்” எனப் பேசினார்.
மேலும், இப்படத்தின் வசூல் குறித்து அவர் கூறுகையில், “தமிழ், மலையாளம், கன்னடம் என மொத்தம் 9 நாள்களில் இப்படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது” என்றார். மேலும், “இந்த படத்திற்கு நாங்கள் (படக்குழு) கொடுத்த விளம்பரத்தை விட நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் தான் மக்கள் மத்தியில் இப்படத்தை எளிதில் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் படத்தின் 50ஆவது நாளில் நிச்சயம் பரிசு கொடுப்போம்” எனக் கூறினார்.