மாமன்னன் நல்ல திரைப்படம் என்றும் திராவிட மாடல் அரசு சமூக நீதியை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பதை அந்த படத்தில் காட்டியுள்ளதாகவும் சென்னை மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் செய்தியாளர்கள் மாமன்னன் திரைப்படம் எப்படி உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “ மாமன்னன் நல்ல படம், நல்லா எடுத்து இருக்காங்க. இப்போ திராவிட மாடல் அரசு சமூக நீதியை, கொள்கையை எந்த அளவுக்கு கடைபிடிக்கின்றார்கள் என்பதை அந்த படத்தில் உதய் அண்ணா காண்பித்துள்ளார். இவ்வளவு பெண்கள் இன்று ஆளுமையில் இருக்கின்றார்கள் என்றால் திராவிட மாடல் சமூக நீதி தானே?" என்றார்.
சொந்த கட்சியிலேயே சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என்பதை காட்டும் வகையில் அந்த படத்தில் காட்சிகள் உள்ளது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ”சொந்த கட்சியில் அப்படி எதுவும் இல்லை. இதுவரை நான் அப்படி எதையுமே சந்தித்தது இல்லை”. இவ்வாறு ப்ரியா தெரிவித்தார்.
மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில்,ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் இத்திரைப்படம் உருவானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த நிலையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே இப்படத்திற்கு தான் பெரிய ஓப்பனிங் கிடைத்ததாக கூறப்படுகிறது. வணிக ரீதியாகவும் மாமன்னன் வெற்றி படமாக அமைந்துள்ளதால்,உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர். இதை வெளிப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜிக்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார். வடிவேலுவை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இளம் வயது அதிவீரனாக நடித்த மாணவர் சூர்யாவுக்கு உதயநிதி லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கினார். படம் வெற்றி பெற்றதை தினம் ஒரு நிகழ்வின் மூலமாக உதயநிதி ஸ்டாலின் கொண்டாடி வருகிறார். மாமன்னன் திரைப்படம் இந்த ஒரு வாரத்தில் 45 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க