நடிகர் சூர்யாவுக்கு இருந்த அரசியல் புரிதலால் தான் தப்பித்த சம்பவம் ஒன்றை நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘ஏழாம் அறிவு’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் ஸ்ருதிஹாசன், அபிநயா என பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற ‘போதி தர்மர்’ தொடர்பான காட்சிகள் இன்றைக்கும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியின் தீவிரம் புரியாமல் தான் இருந்ததாக நேர்காணல் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், ’தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த படங்கள் பேச வேண்டிய கருத்தை சரியாக சொல்கிறார்களா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, ’இப்போது உங்களுக்கு இருக்க அரசியல் விழிப்புணர்வு ஒரு 7,8 ஆண்டுகள் கழித்து மாறலாம். ஒரு காலக்கட்டத்தில் அப்படியான அரசியல் விழிப்புணர்வு எனக்கே இல்லாமல் இருந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்த ஏழாம் அறிவு படம் வெளியானது. நான் தான் ரெட் ஜெயன்ட் சார்பில் தயாரித்தேன் . அதில் சமூக நீதியை விமர்சித்து ஸ்ருதிஹாசன் பேசும் வசனம் இருந்தது. அப்போ எனக்கு அரசியல் புரிதல் கிடையாது. இதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அவரோட அரசியல் புரிதலில் அந்த வசனத்தை வைத்திருந்தார்.
படம் ரெடியானதும் நான் பார்க்கிறேன். குறிப்பிட்ட அந்த காட்சியில் சூர்யாவும் கிடையாது. அவர் படம் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணினார். ஏழாம் அறிவு படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்து பற்றி சீன் வருது. அது வேணாம் தூக்கிடுங்க என சூர்யா சொன்னார். நான் ஒரு சின்ன வசனம்தானே.. விட்டுடுங்க என சொல்லிட்டேன். அப்போ என்னோட அரசியல் புரிதல் என்னவாக இருந்துள்ளது?. ஒன்றும் தெரியாமல் தான் இருந்துச்சு. அதுக்குப்பிறகு காலம் செல்ல செல்ல திமுக இயக்கம் பற்றி, சமூக நீதி பற்றி அரசியலுக்கு வர வர நான் தெரிஞ்சிகிட்டேன்.
முருகதாஸ் அதன்பிறகு அவரது படங்களில் அரசியல் பேசியிருந்தாலும், என்னோட தயாரிப்புல வந்த அந்த படத்தின் காட்சியை இப்போது பார்க்கும்போது தப்பா தான் தெரியுது. நான் அதை பண்ணியிருக்கக்கூடாது. அந்த நேரத்துல சூர்யாவுக்கு அரசியல் புரிதல் இருந்ததால், அவர் சொல்லித்தான் எனக்கு தெரியும்” என அவர் கூறியுள்ளார்.