திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையின் அருகே பெண் கைதிகள் பணியாற்றுவதற்காக இரண்டாவது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரியுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி புழல், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, கோவை, வேலூர் ஆகிய சிறைகள் உள்ளிட்ட 5 இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாக தெரிவித்தார்.


மேலும், பேசிய அவர், “கூடுதலாக புழல், கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 5 இடங்களில் புதியதாக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 


முக்கிய அம்சமாக புழலில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் பகல் நேரத்தில் முழுவதுமாக பெண் கைதிகள் மட்டுமே பணியாற்ற உள்ளது. பகல் நேரத்தில் 40 பெண் கைதிகள் இரண்டு ஷிப்ட் அடிப்படையில் இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்ற உள்ளது. இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு 6 ஆயிரம் அவர்களது குடும்பத்திற்கு பெண் கைதிகள் அனுப்ப முடியும்.


சிறைத்துறை சார்பில் சிறைக்குள் சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறைச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் கைதிகளும் தங்களது ஊதியத்தை குடும்பத்திற்கு பயன்படும் வகையில் அனுப்பி வருகிறது. சிறைவாசிகள் சிறைக்குள் இருந்தாலும் பல்வேறு பணிகளின் மூலம் தங்களது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் பணமீட்ட பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 


சிறைத்துறை முறையாக சோதனைகளை மேற்கொண்டு வருவதால் தான் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த தகவல்கள் வெளியே தெரிய வருகிறது. இந்த சோதனைகள் காரணமாக கைதிகளால சிறை காவலர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் தங்களது உயிரையும் துச்சமாகக் கருதி  சிறை காவல்கள் சீரிய முறையில் தங்களது கடமையை நிறைவேற்றி சிறையை சிறப்பாக நிர்வகித்து வருகிறது.


சிறைக்குள் கொண்டு வருவதை முற்றிலும் தடுப்பதற்காக அனைத்து சோதனைகளும் நடத்தப்படும் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கைதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. சிறை காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு முழு பாதுகாப்பு அளிக்கும்” என்றார். 


கடலூரில் சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்த சிறைக்காவலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் கைதியின் தண்டனை காலத்தை நீட்டிக்கும் எனவும் தெரிவித்தார்.


“இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை நம்பர் 1 என்ற நற்சான்றிதழ் பெற்றிருக்கிறது. கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. சிறை கைதிகள் தகுதி கண்டறியப்பட்டு அதற்குண்டான வேலை வழங்கப்பட்டு வருகிறது. கைதிகளின்  புத்துணர்ச்சிக்காக, விளையாட்டு, நூலகம், கல்வி வழங்கப்பட்டு தற்போது புழல் சிறையில் +2 தேர்வு எழுதிய சிறைவாசிகள் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 


தொழிற்கல்வி மட்டுமின்றி, திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் சிறை கைதிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். சிறைக்குள் வரும் கைதி விடுதலையாகி வெளியே செல்லும் போது பட்டதாரியாகவோ, +2 முடித்தவராகவோ, தொழில் கல்வி முடித்தவராகவோ வெளியே செல்கின்றனர்” என அமைச்சர் ரகுபதி அந்த பேட்டியில் தெரிவித்தார்.