பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மாரிசெல்வராஜ். கர்ணன் படம் மூலமாக தேர்ந்த இயக்குனர் என பெயர் பெற்றார். இதையடுத்து இவரின் இயக்கத்தில் உருவான படம் மாமன்னன். இது அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படம் கடந்த 29ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இதுவரை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த வடிவேலு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மாமன்னன் படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் கதாநாயகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜூற்கு மினி கூப்பர் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:  “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்க மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” இவ்வாறு அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 






இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள  திரைப்படம் மாமன்னன். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. உதயநிதி ஸ்டாலினை வைத்து அருண்ராஜா இயக்கிய நெஞ்சுக்கு நீதி, மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் போன்ற படங்கள் செய்ய முடியாத பாக்ஸ் ஆபிஸ் சாதனையை மாரி செல்வராஜின் மாமன்னன் படம் நிகழ்த்தி இருக்கிறது.  இத்திரைப்படத்தில் வடிவேலுவின்  மற்றும் பகத் ஃபாசில் அபாரமான நடிப்பை  வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.  முதல் இரண்டு நாட்களில் இத்திரைப்படம் ரூ.10 கோடி வசூல் செய்தது. வார இறுதி நாளான நேற்று ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்றும் இப்படம் கணிசமான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.