செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், தவறான தகவலைப் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதயம் திரையரங்க நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் போத்ரா கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள் காங்கிரஸ் எம்பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் மணி ஆகியோரிடம் 35 லட்ச ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை வைத்து ஸ்ரீபெரும்புதூரில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உதயம் இன்ஜினியரிங் கல்லூரி கட்டுவதற்காக வாங்கியதாக கூறப்படுகிறது.
பணத்தை திருப்பிக் கொடுக்காததால் முன் தேதியிட்டு கொடுக்கப்பட்ட செக் வங்கியில் செலுத்தும் போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2015 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகி முன்னாள் எம் பி ரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, தண்டனை விதிக்கப்பட்டவர்களை கைது செய்ய உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி காலமானதால், உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி என்பவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்து சிறையில் அடைக்க கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால், சினிமா பைனான்சியர் போத்ரா தரப்பில் போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ்பாக்கம் துணை ஆணையர் கைது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் மணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க உரிமையாளர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் பரவிய நிலையில், இதற்கு உதயம் திரையரங்க நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அருணா தியேட்டர்ஸ் அண்ட் எண்டர்பிரைசஸ் ப்ரைவேட் லிமிட்டட் உதயம் திரையரங்கம் - சென்னை நிர்வாகத்தினர் பொது மக்களுக்கு தெரிவிக்கும் அறிவிப்பு என்னவென்றால், ஒரு சில ஊடகங்களிலும் சில பத்திரிகைகளிலும் செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க உரிமையாளர் மணி கீழ்ப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணி அவர்கள் உதயம் தியேட்டர் உரிமையாளரோ அல்லது பங்குதாரரோ இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தவறுதலாக அறிவிப்பினை வெளியிடுபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என உதயம் திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.