சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‛அண்ணாத்த’. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிளில் தொடங்கி நேற்று வெளியான ட்ரெய்லர் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 






 


இந்நிலையில் தீபாவளி ரேஸில் இருந்த பல படங்கள், பின்வாங்கின. அதில் தான் சர்ச்சை வெடித்தது. அண்ணாத்த திரைப்படத்தை அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யும் விதமாக பின்னால் வேலை நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக வெளிப்படையாகவே பேசிய எனிமி திரைப்படத்தின் தயாரிப்பாளர், ‛தனது படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால், போராடுவேன்’ என்றெல்லாம் அறிவித்தார்.


அண்ணாத்த தவிர்த்து பிற படங்களுக்கு ஏன் இந்த பிரச்சனை என அனைவரும் சிந்தித்துக் கொண்டிருக்க... நேற்று இரவு திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு திடீரானது தான் என்றாலும், ‛சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்’ என்கிற தலைப்பில் அந்த அறிவிப்பு வெளியானது. அண்ணாத்த திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருப்பதாகவும், அண்ணாத்த படத்தை வெளியிடுவதில் ரெட் ஜெயிண்ட் பெருமை கொள்வதாகவும்,’ அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


உதயநிதி அதை ரீட்விட் செய்திருந்தார்...






பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், தியேட்டர் கெடுபிடிகளை தவிர்க்கவும், நஷ்டமில்லாமல் வசூல் எடுக்கவும், அனைவரையும் தியேட்டருக்கு வரவழைக்கவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த யுக்தியை கையாண்டிருக்கலாம். உதயநிதி படத்தை வெளியிடும் போது, தியேட்டர் ரீதியான சர்போர்ட் கிடைக்கும், போலீஸ் மற்றும் அதிகாரிகள் ரீதியான பேக்கப் கிடைக்கும். எனவே இந்த முயற்சியை சன் பிக்சர்ஸ் முன்னெடுத்து முடித்திருக்கிறது.




எனிமி படத்தின் தயாரிப்பாளர் முன்வைத்த சந்தேகம் இதன் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது என்றே தெரிகிறது. டிக்கெட் விலை ஆயிரத்தை கடக்கும் என ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அதற்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் நிகழ்வுகள் நகர்ந்திருப்பதாகவே தெரிகிறது.