மதுரை மாநகர் பகுதிகளான செல்லூர், அய்யர்பங்களா, சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி போன்ற இடங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் நடைபெற்று வருவதாக, மதுரை மாநகர காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இரவு நேரங்களில் நடைபெறும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் 2-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டன. இதில் திருட்டுச்சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான தேனி மாவட்டம், அல்லிநகரத்தை சேர்ந்த சோனிராஜா, மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த பெரியராமு, சுலைமான், அழகர்சாமி, ராஜ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இதில் குற்றவாளி சோனி ராஜாவிடமிருந்து 5 இடங்களில் திருடப்பட்ட விலை உயர்ந்த பைக், எல்.இ.டி டி.வி, மற்றும் 6 பவுன் தங்க நகைகளும், சுலைமானிடமிருந்து 8 வழக்குகளில் தொடர்புடைய 32 சவரன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. பெரியராமுவிடமிருந்து 7 சவரன் தங்க நகைகள் ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் காவல்துறையின் விசாரணையில் ஐந்து பேரும் திருப்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும், சின்னாளபட்டியில் கோவில் உண்டியல்களில் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடயம் இல்லாமல் திருட்டில் ஈடுபடுவதற்காக குற்றவாளிகள் பயன்படுத்திய கையுறைகள் மற்றும் மங்கி குல்லா உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
குற்றவாளிகள் ஐந்து பேரிடம் இருந்து மொத்தம் 14 வழக்குகளில் திருடுபோன 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 55 பவுன் தங்க நகைகள், ரூ.17,5000 மதிப்புள்ள ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனங்கள், உண்டியல் திருட்டில் களவுபோன 42ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 25,ஆயிரம் மதிப்புள்ள கலர் டி.வி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேற்படி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குகளில் பறிபோன சுமார் ரூ.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், மற்றும் பொருட்களை கைப்பற்றிய தனிப்படை காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டினார்.
மதுரை மாநகரில் இதுவரை 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள், தங்களது வசிப்பிடங்கள் மற்றும் தங்களது வணிக நிறுவன வளாகங்களில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி சமூக விரோத மற்றும் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உதவிடுமாறு மதுரை மாநகர காவல்துறை கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!