’உடன்பிறப்பே’ அண்ணன் – தங்கை பாசம் என்ற அதே பழைய கான்ஸ்செப்ட்தான் என்றாலும் பல குடும்பங்களில் பரண்மீது ஏற்றப்பட்டுவிட்ட பாசத்தை மீண்டும் இறக்க வைக்கும் முயற்சியை எடுத்த இயக்குநர் இரா.சரவணனை பாராட்டியே ஆகவேண்டும்.



இயக்குநர் இரா.சரவணன்


பாசத்தை கருவாக கொண்டு கதை சுற்றி வந்தாலும், கல்வி, விவசாயம், நிலத்தடி நீரின் முக்கியத்துவம், சாதி மறுப்பு, பகுத்தறிவு, தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளை, சத்தியம், சட்டம், சாமி, அரசியல் என ஒரு பறவை மாதிரி அதற்குள் ஏகப்பட்ட விதைகளை விதைத்து வைத்திருக்கிறார்.


காத்தாயி அம்மன், ஐய்யானரப்பன், தூண்டிக்காரன் என கிராமங்களின் தெய்வங்களை அடையாளப்படுத்தியதும் அந்த தெய்வங்களுக்கு பெண்களே வழிபாடு நடத்தி, பக்கத்து வீட்டுகாரன் மாதிரி உரிமையாக அவர்களோடு பேசுவதும் போன்ற காட்சிகளை வைத்து, திட்டமிட்டு மறைக்கப்பட்ட சிறு தெய்வ வழிபாட்டை மீண்டும் தமிழ் பெருங்குடிகளுக்கு நினைவூட்டியிருக்கிறார் சரவணன்.


‘நல்ல பேரு வாங்கனும்னு நெனக்கிறது கூட ஒரு விதத்துல லஞ்சம்தான் மச்சான்’, ’தப்பு செஞ்சா சாமியா இருந்தா கூட சட்டைய புடுச்சு கேட்டுடனும் மாப்ள’ ‘நல்லது பண்றதுக்கு அரசியலுக்கு வரனுங்கிறது இல்ல ; நல்ல பண்றதே அரசியல்தான்’ போன்ற வசனங்கள், படம் முடிந்தும் மனதில் நிற்கின்றன.


 ‘அண்ணன் யாரண்ணே மண்ணுல உன்னாட்டம் ; உன்னை கண்டாலே நெஞ்சுல கொண்டாட்டம்’ என்ற டைட்டில் பாடலின் வரிகளும், இசையும், குரலும் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. 



ஆனால், சூரி, வேலராமமூர்த்தி, ஆடுகளம் நரேன் போன்றவர்களுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் திறமைகளை பயன்படுத்த தவறியது, சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் பழைய மிளிர்வு இல்லாதது, கதையின் போக்கு ஆங்காங்கே சலிப்பு தட்டுவது, இரண்டாம் பாதியில் ஏற்படும் தடுமாற்றம் போன்றவை படத்திற்கு சற்று பின்னடைவு என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதேபோல், தான் பெற்ற பிள்ளையை விட்டுவிட்டு அண்ணன் குழந்தையை ஜோதிகா காப்பாற்றுவது, அண்ணன் சசிகுமாரை காட்டிலும் அவரது மனைவியான அத்தாச்சி சிஜாரோஸ், ஜோதிகாவிற்காக அழுவது போன்ற காட்சிகள் சற்று தூக்கலாக இருப்பதாக தோன்றினாலும் கூட, குடும்பமாக கூடி பார்க்க வேண்டிய படம் உடன்பிறப்பே.


மொத்தத்தில் உடன்பிறப்பு – பாசப்பிணைப்பு..!


Udanpirappe Movie Review: அழ வைக்க அதீத முயற்சி... எடுபட்டதா ‛உடன்பிறப்பே’?


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண