அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படத்தின் போது ரேவதி என்கிற பெண் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது , அவர் வீட்டில் மாணவர்கள் கல்லெறிந்தது என இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. நடிகர் அல்லு அர்ஜூனை தெலங்கானா காவல் துறை கைது செய்ததைத் தொடர்ந்து 14 நாட்கள் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஜாமினில் வெளியான அல்லு அர்ஜூன் சமீபத்தில் 14 நாட்கள் தண்டையை நிறைவு செய்தார். புஷ்பா 2 பட விபத்து அடங்கி முடிப்பதற்குள் அடுத்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது
கேம் சேஞ்சர் நிகழ்விற்கு வந்த இருவர் உயிரிழப்பு
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஆந்திரா மாநிலத்தில் ராஜமுந்த்ரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆந்திரா துணை முதலமைச்சரும் , ராம் சரணின் சித்தப்பாவுமான நடிகர் பவன் கல்யான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்விற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கு வந்து திரும்பும் வழியில் இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.
காக்கினாடாவைச் சேர்ந்த ஆரவா மணிகண்டா மற்றும் தோகடா சரண் ஆகிய இருவரும் பைக்கில் கேம் சேஞ்சர் பட நிகழ்விற்கு வந்துள்ளார்கள். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது எதிரில் வந்த வேனில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம் சரண் நிதியுதவி
விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் ராம் சரண் விபத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். புஷ்பா 2 விபத்தில் பெண் உயிரிழந்ததற்காக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது போல ராம் சரண் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் உயிரிழந்த இருவரும் நிகழ்வு முடிந்து திரும்பு வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ராம் சரண் தவறு இல்லை என அவருக்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.