சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் நல்லது நடப்பது என்பது அத்திவரதர் தரிசனம் போல. என்றாவது நடக்கும். ஆனால் தீமைகள், கெடுதல் எல்லாம் மேஹி போல இரண்டு நிமிடத்தில் தயாராகிவிடும். 3 வருடத்திற்கு பின் இப்போது அர்ஜூன்-ரோஜா முதல் இரவு நடந்தது. யார் கண் பட்டதோ.. ஒரு வாரம் கூட ஆகவில்லை... ரோஜா சிறையில் இருக்கிறார். அதுவும் கொலை வழக்கில். 


முதலிரவு முடித்த கையோடு மறுநாளே டிசி சந்திரகாந்தா கொடுத்த ஆபரேஷனுக்காக ஹனிமூன் பிளான் போட்டு சாக்ஷியை பிடிக்க புறப்பட்ட அர்ஜூனிடம், நானும் வந்தே தீருவேன் என வாண்டடா ஏறிச் சென்ற ரோஜா, வழக்கம் போல ஓவர் ஆக்டிங் செய்து, கொலை கேஸில் சிக்கியுள்ளார். சாக்ஷியை நோக்கி சுடும் போது, அவர் விலகிச் செல்ல, பின்னால் இருந்த ரவுடி மீது தோட்டா பாய்ந்து அவர் பலியானார். ரோஜா சுட்டு தான் அவர் இறந்தார் என்பது தான் பிராது. ஆனால் ரோஜா சுடவில்லை என்று தான் இன்னும் சில வாரங்களிலோ.. சில வருடங்களிலோ... தீர்ப்பு வரப்போகிறது. 


பிரபல வழக்கறிஞர் அர்ஜூன், கைதியான தன் மனைவியை எவ்வாறு மீட்கலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது, அவரது அத்தை கணவரும், ரோஜாவின் அப்பாவுமான டைகர் மாணிக்கம் அங்கு வருகிறார். ‛அர்ஜூன்... நானும் இந்த வழக்கில் ஆஜராகி ரோஜாவை மீட்போம்...’ என்கிறார். அர்ஜூனுக்கு கடந்த கால நிகழ்வுகளை வைத்து டைகர் மாணிக்கம் மீது டவுட். ஆனால் டைகர் மாணிக்கம், ரைடர் மாணிக்கமாக அர்ஜூனை சமரசம் செய்து சம்மதிக்க வைக்கிறார். ‛என்னோட இத்தனை வருட அனுபவத்தை இறக்கி... ரோஜாவை தூக்க உதவுறேன்..’ என சம்பவ டயலாக்குகளை கூறுகிறார். அதுவரை எதிரும் புதிருமாக இருந்த அர்ஜூன்-டைகர் மாணிக்கம், இப்போது முதன்முறையாக, ‛சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா...’ என்கிற பின்னணியோடு இணைகிறார்கள். 


இனி கோர்ட் அலறப்போகுதே... என பார்வையாளர்கள் காத்திருக்க, அரசு தரப்பு வழக்கறிஞராக ஜே.எஸ்., என்கிற ஜெயசீலன் வரப்போவதாக மூச்சு முட்ட ஓடி வந்து அர்ஜூனிடம் தகவல் தெரிவிக்கிறார் அவரது உதவியாளர். ஒரே அதிர்ச்சி... ஜே.எஸ்., வாதாட போறாரா... என்பது தான் அதிர்ச்சி. ‛யார்டா... இது புது கேரக்டர்... பில்டப் வேறு பயங்கரமா இருக்கே...’ என அந்த ஜே.எஸ்.,யை பார்க்க காத்திருந்தால், பலமான பின்னணியை கடந்து குளோஸ் ஷாட்... பார்த்தால், எம்.ஆர்.வாசு...! காமெடிக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டவர்.



அவரை டெரர் வழக்கறிஞராக நிறுத்தியுள்ளனர். அவரும், நேர்கொண்ட பார்வை அஜித் மாதிரி,  உடல் மொழி காட்டுகிறார். ரோஜாவில் கோர்ட் காட்சிகள் புதிதல்ல. ஆனால், இம்முறை அர்ஜூன்-டைகர் மாணிக்கம் இணைந்து ஜே.எஸ்.,யை துவம்சம் செய்ய போகிறார்கள் என்பதால், நீதிமன்றம் வேறு ரகத்திற்கு மாறப் போகிறது என இயக்குனர் தரப்பு நினைத்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் அதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்பது நமக்கு மட்டும் தானே தெரியும்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொட


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண