நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ச்சியாக சினிமா, அரசியல் என இரண்டிலும் பயணப்படும் வரும் விஜய் பிரச்சினைகள் என்பது புதிதல்ல. கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய படம் ரிலீசாகும் சமயத்தில் எல்லாம் பிரச்சினைகளை சந்தித்து வருவார். இது விஜய் ரசிகர்களுக்கும் சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. பிரச்சினையில் சிக்கினாலே படம் ஹிட்டு தான் என்ற நிலைமையும் வந்துவிட்டது. 


ஆனால் சமீபகாலமாக விஜய்யின் குடும்ப விவகாரம் தொடர்பான தகவல்கள் பல வதந்திகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. அப்பாவுடன் தான் பிரச்சினை என்றிருந்த விவகாரம், மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறார் என பரவியது. தொடர்ந்து விஜய்யுடன் நடித்த கீர்த்தி சுரேஷை இணைத்து இணையத்தில் சிலர் பதிவுகளை வெளியிட அது கடும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது அந்த விவகாரம் திரிஷா வரை வந்துள்ளது. 






கில்லி படத்தில் விஜய் - திரிஷா ஜோடி முதன்முதலில் இணைந்து நடித்தது. தொடர்ந்து ஆதி, குருவி, திருப்பாச்சி என 4 படங்கள் அடுத்தடுத்து நடித்த நிலையில் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. விஜய் - திரிஷா இணைந்து நடிக்காமல் போனதற்கு காரணம் மனைவி சங்கீதா தான் என அந்த காலக்கட்டத்தில் ஒரு தகவல் பரவியது. இது காலப்போக்கில் காணாமல் போன நிலையில், மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து லியோ படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடித்தார். 


லியோ படப்பிடிப்பில் இருந்த நிலையில் கடந்தாண்டு விஜய் பிறந்தநாளுக்கு திரிஷா வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் மாஸ்டர் பட நிகழ்ச்சிக்குப் பின் விஜய்யுடன் எந்த நிகழ்ச்சியிலும் மனைவி சங்கீதா இல்லாதது பலருக்கும் சந்தேகத்தை உண்டாக்கியது. ஆனால் மகன் சஞ்சய், மகள் திவ்யா இருவரும் வெளிநாட்டில் படிப்பதால் சங்கீதா அவர்களுடன் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் பிறந்தநாள் வந்தது. அதற்கு மறுநாள் திரிஷா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 


மேலும் திரிஷாவும், விஜய்யும் லிஃப்ட் ஒன்றில் இருப்பது போல புகைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் சம்பந்தமே இல்லாமல் விஜய், திரிஷா பற்றி தகவல் பரப்ப ஆரம்பித்தனர். இது இருதரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த நேரத்தில் விஜய் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


அதில் பேசும் விஜய், “உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் அது தெளிவாகும். அதுவே வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும்” என தெரிவிக்கிறார். தான் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் தன்னைப் பற்றி பலவிதமான தாக்குதலும் வரலாம் என்பதை உணர்ந்து தான் விஜய் அமைதியாக இருக்கிறார் என அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ உண்மை, பொய் என தெரியாமல் தவறான தகவல்களையோ,தனிப்பட்ட நபர்களை விமர்சித்தோ தகவல் பரப்பாதீர்கள் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.