நீயா நானா


மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தையொட்டி கடந்த வார நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளி , கல்லூரி படிக்கும் மாணவர்கள் ஒரு பக்கம் படித்துக்கொண்டும் இன்னொரு பக்கம் தங்கள் குடும்ப சூழல்களை சமாளிக்க கூலி தொழிலாளிகளாக வேலை செய்யும் பல்வேறு மாணவர்களும்  அவர்களின் பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியில்  கலந்துகொண்டார்கள். இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பல மாணவர்களின் கதைகள் பார்ப்போரின் மனதை கலங்க வைத்துள்ளது. தனது அம்மாவை பார்த்துகொள்ள மூட்டை தூக்கும் வேலைக்கு  செல்லும் மாணவன் , தனது குடும்ப சூழல்கள் காரணமாக எந்த விதமான ஆசைகளையும் வளர்த்துகொள்ளாத மாணவன் , தனது அப்பா இறந்த போது கிராம நிர்வாகி தன்னை காக்க வைத்தார் அதனால் தானும் கிராம சபை நிர்வாகியாகி யாரையும் அப்படி காக்க வைக்கக் கூடாது என லட்சியத்தோடு இருக்கும் மாணவன் என பலவிதமான இளைஞர்கள் மனதை உருக்கும் வகையில் பேசியுள்ளார்கள்.


மாணவருக்கு உதவிய விஜய் 


மாணவர் ஒருவர் தனது அம்மாவிற்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக தான் கூலி வேலைக்கு செல்வதாகவும் . வேலைக்குச் சென்று சில நேரங்களில் பேருந்தை தவறவிட்டுவிட்டால் 3 கிலோமீட்டர் நடந்தே வீட்டிற்கு சென்றுவிடுவேன் என பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இசையமைப்பாளர் தமன் தன் சார்பாக மாணவருக்கு இரு சக்கர வாகனம் ஒன்றை வழங்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அடுத்த அரை மணிநேரத்தில் தவெக தலைவர் விஜய் அந்த மாணவருக்கு உதவி செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார். 






கோவில்பட்டியில் இருந்த தவெக நிர்வாகிகளை தொடர்புகொண்டு மாணவரின் அம்மாவிற்காக மெத்தை மற்றும் வீட்டிற்கு தேவையான மற்ற பொருட்களை வாங்கி கொடுக்கச் சொல்லியிருக்கிறார் விஜய். மேலும் மாணவனின் அம்மாவின் வங்கி கணக்கில் 25 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார். தவெக கட்சி அலுவலகத்திற்கு அந்த மாணவனை அழைத்து கட்சிக் கொடியை ஏற்றவைத்துள்ளார் விஜய். விஜயின் இந்த செயல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.