உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு அரசியல் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் த.வெ.க கட்சியின் இலக்காக கொண்டு ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடனும்,பொறுமையாகவும் விஜய் எடுத்து வருகிறார். அவ்வப்போது கட்சியின் பொறுப்புகளில் நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார். 


இதனிடையே அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையின்படி, “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்யின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.






மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை. மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையும் ரொட்டி, பால் ஆகியவை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


விஜய்யின் சினிமா பயணம் 


அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள விஜய் தற்போது “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு படம் நடித்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார்.