தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய இவர் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அவரது நடிப்பில் உருவாகும் கடைசித் திரைப்படம் தளபதி 69 படப்பூஜை கடந்த மாதம் தொடங்கியது.
தளபதி 69 படப்பிடிப்பு தொடக்கம்:
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான எச்.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு நடிகர் விஜய் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற அரசியல் மாநாட்டிற்கு பிறகு விஜய் பல்வேறு அரசியல் விமர்சனங்களையும், ஆதரவுகளையும் சந்தித்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தலுக்காக முழு மூச்சில் பணியாற்றி வரும் விஜய், தனது கடைசி படத்தின் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது கடைசி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அவருடன் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.
நட்சத்திர பட்டாளம்:
விஜய் அரசியலுக்கு வரும் முன்னர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை உருவாக்க விஜய் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், நரேன், ப்ரியாமணி, மமைதா பாஜூ, மோனிஷா ப்ளெஸ்ஸி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கன்னட திரையுலகின் மிகப்பெரிய விநியோகஸ்த நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக இந்த படத்தை தயாரிக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அரசியல் த்ரில்லர் கதையாக உருவாக உள்ளது. இந்த படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் திரையுலகில் இருந்து விலகியிருப்பது மிகப்பெரிய சோகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவருடைய கடைசி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு அறிவிப்பு வீடியோ மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 69 படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.