TTF Vasan: தமிழ் சினிமா வட்டாரத்தில் நேற்றிலிருந்து ஒரு சலசலப்பை கிளப்பியுள்ள விஷயம், சர்ச்சைக்குரிய யூடூபர் டி.டி.எஃப் வாசன் நடிப்பில் ”மஞ்சள் வீரன்” என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிடிஎஃப் வாசன் பிறந்த நாளான நேற்று அதாவது ஜூன் மாதம் 29-ஆம் தேதி  அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரும் வெளியிடப்பட்டது. 


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டி.டி.வி.வாசனை யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை ரூ.35 லட்சத்தை தாண்டியுள்ளது. 


நேற்று நடைபெற்ற மஞ்சள் வீரன் படத்தின் பூஜைக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த டிடிஎஃப் வாசன், ”முன்பெல்லாம் இருசக்கர வாகனத்தில் 249 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றிருக்கிறேன், ஆனால், தற்போது அதிவேகமாக செல்வதில்லை என  கூறினார். அதோடு அரசு அறிவித்துள்ள 40 கி.மீ வேகத்தில் மட்டுமே இனி இருசக்கர வாகனத்தில் பயணிக்க உள்ளதாகவும்” கூறினார். 


அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய படத்தின் இயக்குனர் செல்அம், தமிழ் சினிமாவை பொறுத்தவரை ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்கள் தான் தேவைப்படுகிறது. அதனால்தான்,  டிடிஎஃப் வாசனை ஒரு ஆண்டுகளுக்கு மேலாக கண்காணித்து வந்ததாகவும், அவர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்ததால்தான்  அவரை கதாநாயகனாக தேர்வு செய்து அவரிடம் கதை கூறியதாக கூறினார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இயக்குனர் செல்அம் இயக்கத்தில் யூடூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கவுள்ள “மஞ்சள் வீரன்”திரைப்படத்தின் பூஜை மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் கதாநாயகன் டிடிஎஃப் வாசன், இயக்குனர் செல்அம் மற்றும் தயாரிப்பாளர் கவிதா பிரியதர்ஷினி, ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.