நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.


விஜய்யின் அரசியல் வருகை


 1984ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் விஜய். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தப் படத்துடன் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் நடிகர் விஜய். 1992ஆம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் அவரை முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதன் தொடர்ச்சியாக செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்து கமர்சியல் படங்களாக நடித்து இளைய தளபதி என்ற அடைமொழியுடன் கொண்டாடப்பட்டார். 


காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக உள்ளிட்ட படங்களின் மூலம் ரொமாண்டிக் நடிகராக உருவான விஜய் கில்லி, திருபாச்சி,  சிவகாசி, போக்கிரி உள்ளிட்ட படங்களின் மூலம் மாஸ் நடிகராக மாறினார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் விஜய்யின் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தத் தொடங்கின. தனது சினிமா கரியரில் உச்சத்தில் இருக்கும் விஜய், தற்போது அரசியலுக்கு வருகை தர முடிவு செய்துள்ளார்.


விஜய்யின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும் ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கதான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் 69 ஆவது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.  


தளபதி 69


 நடிகர் விஜய்யின் கடைசி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக முதலில் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து எச். வினோத் அல்லது வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கலாம் என்று தகவல் வெளியானது. தற்போது இந்தப் பட்டியலில் மற்றொரு இயக்குநர் இணைந்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு உள்ளிட்டவர்களை வைத்து மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த த்ரிவிக்ரம், விஜய்யின் கடைசி படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


அல்லு அர்ஜூனை வைத்து இவர் இயக்கிய ’ அல வைகுண்டபுரம் லோ’ படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மேலும் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படம் நல்ல வெற்றிபெற்றது. தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கும் த்ரிவிக்ரம் விஜய்யின் படத்தை இயக்கினால் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.