’வர்ஷம்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், தன் அறிமுகப்பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் காட்சியைப் பகிர்ந்து த்ரிஷா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
திரிஷா :
கோலிவுட்டில் தொடங்கி டோலிவுட் பயணித்து தென்னிந்திய சினிமா முழுவதும் கடந்த 20 ஆண்டுகளாக க்யூட் குயினாக நடிகை த்ரிஷா கோலோச்சி வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த த்ரிஷா, 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றதுடன், மாடலிங் உலகில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து 2002ஆம் ஆண்டு ’மௌனம் பேசியதே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த த்ரிஷாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். 2004ஆம் ஆண்டு நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக நடித்த ‘வர்ஷம்’ படத்தில் த்ரிஷா அறிமுகமான நிலையில் அப்படம் அவரது கரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
வர்ஷம் படம் :
தமிழில் ஸ்ரேயா, ஜெயம் ரவி நடித்த ‘மழை’படத்தின் ஒரிஜினல் பதிப்பான வர்ஷம் படம், தெலுங்கில் மாஸ் காட்டி வசூல் வேட்டை நடத்தியது.
ஆக்ஷன் கலந்த காதல் கதையான இப்படத்தை சோபன் இயக்கி இருந்தார், தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் தெலுங்கில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சில்வர் ஜூப்ளி படமாக திரையரங்குகளில் ஓடித்தீர்த்த இப்படம் முன்னதாக தெலங்கானாவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு :
நடிகர் பிரபாஸ் திரையுலகுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் விதமாக வர்ஷம் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இப்படத்தின் திரையரங்கக் காட்சிகள் முன்னதாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகின.
அதில் த்ரிஷாவின் அறிமுகப்பாடலான ‘நூ ஒஸ்தாவண்டே ....’ பாடலுக்கு ஒட்டுமொத்த திரையரங்கமும் எழுந்து நடனமாடி ஆர்ப்பரிக்கும் காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில், முன்னதாக இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து த்ரிஷா அகமகிழ்ந்து போயுள்ளார்.
"என் முதல் தெலுங்கு படம்.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்தது போல் உணர்கிறேன். திரைப்படங்கள் என்றைக்குமானவை என்பதை நிரூபிக்கப் போகிறேன்.
உங்களால் தான் நான் நானாக இருக்கிறேன் என்று மீண்டும் சொல்கிறேன். என் இதயம் மழையால் நனைந்துள்ளது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
த்ரிஷாவின் இந்தப் பதிவில் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.