2015-ம் ஆண்டில் வெளியான லயன் படத்துக்கு பிறகு தெலுங்கில் மூத்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா படத்தில் மீண்டும் ஜோடி சேர்கிறார் நடிகை திரிஷா. கோபிசந்த் மாலினேனி இயக்கும் புதிய படத்தில் நடிக்க திரிஷாவிடம் அதிக நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டு உள்ளது.
கோபிசந்த் இயக்கத்தில் திரிஷாவுடன் ஜோடி சேரும் இந்த திரைப்படமே பாலகிருஷ்ணாவின் திரை வாழ்வில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் நடிகை திரிஷா, குடும்பப் பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக 2016-ம் ஆண்டு நாயகி என்ற பேய் படத்துக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார் திரிஷா.
திரைப்படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், திரிஷா அதிக நாட்கள் இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார். ஆனால், இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானால் 5 ஆண்டுகளுக்கு பிறகு திரிஷா நடிக்கும் தெலுங்கு படம் இதுவாக இருக்கும்.
இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை வைத்து போலீஸ் கதையாக தயாரிக்கப்பட இருப்பதாகவும், இதில் பாலகிருஷ்ணா மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிக பொருட் செலவில் தயாராக இருக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
வித்தியாசமான நம்ப முடியாத சண்டைக் காட்சிகளுக்காகவே பிரபலம் அடைந்த தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் மகன் ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 61 வயதிலும் ஆக்சன் ஹீரோவாக கலக்கி வருகிறார் பாலகிருஷ்ணா.
படத்தில் மட்டுமின்றி நிஜத்திலும் கோபக்காரான நந்தமுரி பாலகிருஷ்ணா, தன்னை செல்பி எடுக்க வரும் ரசிகர்களை தாக்கி நிஜ வாழ்விலும் ஆக்சன் ஹீரோவாக இருக்கிறார். 2004-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் அவரது உதவியாளரை துப்பாக்கியால் சுட்டதற்காக கைது செய்யப்பட்டவர் பாலகிருஷ்ணா.
தற்போது பாலகிருஷ்ணா போயாபதி சிந்து இயக்கத்தில், தமன் இசையமைப்பில் தயாராகி வரும் அகாண்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது. அகாண்டாவுக்கு பிறகு திரிஷாவுடன் பாலகிருஷ்ணா நடிக்கும் படம் திரைக்கும் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் கடைசியாக பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்த நடிகை திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் 2 பாகங்களாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும், மலையாளத்தில் ராம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.