விஜய் - த்ரிஷா ஜோடி
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் 67ஆவது படமான இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் எனத் தெரியவந்தது முதலேயே ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியது.
மேலும் கோலிவுட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் விஜய்யின் சிறந்த ஆன்ஸ்க்ரீன் ஜோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்படும் நடிகை த்ரிஷா இப்படத்தில் இணைந்ததை அடுத்து ரசிகர்கள் கொண்டாட்ட மன நிலையில் ஆழ்ந்தனர். த்ரிஷாவுக்கும் இந்தப் படம் 67ஆவது படமாக அமைந்துள்ளது ரசிகர்களை மேலும் ஆர்வத்தில் ஆழ்த்தியது.
தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி படம் குறித்த அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, பூஜை வீடியோக்கள் , ஃபோட்டோக்கள் பகிரப்பட்டன. தொடர்ந்து ’லியோ’ எனும் படத்தலைப்பும் பிப்.03ஆம் தேதி டைட்டில் டீசர் உடன் அறிவிக்கப்பட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
வழிபாடு செய்த த்ரிஷா
இந்நிலையில், சென்ற மாதம் மத்தியிலேயே நடிகை த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் தகவல் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. ஆனால், லியோ டைட்டில் டீசர் வெளியான பிறகு கடந்த சில நாள்களாக த்ரிஷா லியோ படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும், இதனால் மீண்டும் சென்னை திரும்பிவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அவரது தாயார் உமா கிருஷ்ணன் உடனடியாக ஒரு அறிக்கை மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனை அடுத்து, காஷ்மீரில் இருக்கும் திரிஷா, அவரின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்திருந்தார்.
இந்நிலையில் சிவபெருமானுக்கு உகந்த நாளான நேற்று (பிப்.17) நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. மக்கள் இந்த நாளில் சிவன் பெயரில் பூஜைகள், மந்திர உச்சாடானங்கள், விரதம் என சிவனுக்காகவே இந்த நாளை கொண்டாடுகிறார்கள். மேலும் பலர் தூங்காமல் இருந்து சிவனுக்காக விரதமிருந்த இந்த நாளை பக்திமயமாகக் கழித்தனர்.
அதன்படி, ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் இருக்கும் த்ரிஷா, மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று படப்பிடிப்பிற்கு அருகில் இருக்கும் சிவா ஆலயத்திற்கு சென்று, சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டார். இது சம்பந்தமான வீடியோவையும் அரவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
திரிஷா மட்டுமின்றி, தென்னிந்திய, வட இந்திய பிரபலங்கள் பலரும் சிவராத்திரி வாழ்த்து கூறி தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க